ஒன்றாக இருந்தாலும் ஒவ்வாமைகள் பலவற்றால் இடைவெளிகள் அதிகமாகி தன்வழி தனி வழி என ஒவ்வொருவரும் தனித்துப் போய்க் கொண்டிருக்கும் தோற்றப்பாடு நாகரிகமாக ஆக்கப்பட்டிருக்கும் ஒரு காலப்பகுதியில் புனித ரமழானை வரவேற்று பயன்படுத்தி வழி அனுப்பிவிட்டு ஈதுல் பித்ர் கொண்டாடும் நெஞ்சங்களுக்கு இனிய பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் எ எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய காலத்திற்கு இன்றியமையாத தேவைகளுள் ஒன்றாக உள்ளங்களின் இணைப்பும் உறவுகளின் இனிப்பும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியிருக்கின்றன.
அன்பும் சகோதரத்துவமும் மனித நேயமும் அறுத்துப் பலியிடப்படும் பலஸ்தீன் ஒரு பக்கம், அவற்றை முதலீடாக்கி இலாபம் சம்பாதிக்கும் வர்த்தக வல்லாதிக்கம் கொண்ட சாம்ராஜ்யப் போட்டி மற்றொரு பக்கம், என உலகம் மனித மாண்புகளை இழந்து செல்லும் சூழலில் உள்ளங்களின் இணைப்பை பாதுகாக்க வேண்டிய கடமைப்பாடு அனைவருக்கும் இருக்கிறது.
ரமழானில் பெற்ற பயிற்சிகள் அல்லாஹ்வுடனான உறவையும் மனிதர்களுடனான உறவுகளையும் செப்பனிட்டிருக்கும் இவ்வேளையில் அந்த உறவுகள் இனிதே தொடர வேண்டும் என இந்நன்னாளில் உளமாற பிரார்த்திக்கின்றேன்.
மூன்று சமூகங்களின் பெருநாட்கள் ஒன்றாக வருகின்ற வேளையில் மனிதநேயத்தின் பெரு நாட்களாக அவை அமைய வேண்டும் என்றும் அவாவுருகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.