கொழும்பு நகர எல்லைக்குள் போக்குவரத்து விளக்குகளில் பிச்சை எடுப்பவர்களுக்கு பணம் வழங்க வேண்டாம் என போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் பிச்சைக்காரர்களை அகற்றுமாறு 45 பொலிஸ் பிரிவுகள் மற்றும் 607 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு, சிரேஷ்ட அதிகாரிகளால் கையொப்பமிடப்பட்ட சுற்றறிக்கையின் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
” இவ்வாறான 94 பிச்சைக்காரர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருப்பினும், தற்போதைய நிலைமைகளால், இந்த பிச்சைக்காரர்களை நீண்ட காலத்திற்கு காவலில் வைக்க முடியாது. வசதிகள் இல்லாததால், அவர்கள் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்படுகிறார்கள்,” என்றார்.
பொலிஸ் காவலிலிருந்து வெளிவந்த பிறகும், இந்த பிச்சைக்காரர்கள் அடிக்கடி தங்கள் வழக்கமான நடவடிக்கைகளுக்கு திரும்புகிறார்கள்.
கொழும்பு மாநகரசபைக்குள் 180 போக்குவரத்து விளக்குகள் இருப்பதால், பிச்சைக்காரர்கள் அடிக்கடி இந்த விளக்குகளைப் பயன்படுத்தி வீதிகளுக்குள் நுழைந்து பிச்சை எடுப்பதைத் தொடர்கின்றனர்.
கொழும்பு நகர எல்லையில் உள்ள போக்குவரத்து விளக்குகளில் பிச்சைக்காரர்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
பிச்சைக்காரர்களை அகற்றுதல், புனர்வாழ்வளித்தல், கைது செய்தல் போன்றவற்றுக்கு பொலிஸ் திணைக்களத்திற்கு நடைமுறைகள் இல்லாத காரணத்தினால், கொழும்பு நகர எல்லைக்குள் வீதி விளக்குகளில் பிச்சை எடுப்பவர்களுக்கு உதவுவதைத் தவிர்ப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் மூன்று மொழிகளில் காணொளி அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.