ஐக்கிய அமீரகத்தில் மழை கொட்டி வரும் நிலையில், பொதுமக்கள் கடற்கரைகளில் இருந்து விலகி இருக்கும்படி அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
துபாய் மட்டுமின்றி அபுதாபியிலும் கனமழை கொட்டி வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டின் வேலூர் மற்றும் கரூர் பரமத்தியில் 111 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
ஆனால், பாலைவன நகரமாகக் கருதப்படும் துபாயில் இப்போது கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு சில உயிரிழப்புகளும் கூட ஏற்பட்டுள்ளன. மோசமான வானிலை நிலவும் என்பதால் பொதுமக்கள் தயவுசெய்து கடற்கரைகளில் இருந்து விலகி இருங்கள் என்றும் பள்ளத்தாக்கு பகுதிகள், கனமழை மற்றும் தாழ்வான இடங்களுக்குச் செல்வதை முழுமையாகத் தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய அமீரத்தில் மோசமான வானிலை நிலவும் நிலையில், துபாயில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஐக்கிய அமீரக நகரங்களுக்கு இடையே ஓடும் இன்டர்சிட்டி பஸ் சேவைகளும் நிறுத்தப்பட்டன. துபாய் மற்றும் அபுதாபியை இணைக்கும் நெடுஞ்சாலை கனமழையால் இன்னும் நீரில் தான் மூழ்கிக் கிடக்கிறது.
அபுதாபியின் சில பகுதிகளில் தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஜெபல் அலி, அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம், துபாய் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பார்க் ஆகிய இடங்களில் பலத்த காற்று வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில், சில சூப்பர் மார்கெட்கள் மற்றும் உணவகங்களில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளன.
பாலைவன நகரமான துபாயில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதால் ஒரேஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதேநேரம் கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி பெய்த கனமழை அளவுக்கு வானிலை மோசமாக இருக்காது என்று போதிலும் கவனமாக இருக்க அந்நாட்டுத் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.