வெசாக் தினங்களில் தன்சல்களில் வழங்கப்படும் உணவு உண்பதற்குத் தகுதியற்றதாக இருந்தால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகரிடம் தெரிவிக்குமாறு சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.
வெசாக் காலத்தில் நடத்தப்படும் தன்சல்கள் பொது சுகாதார பரிசோதகரால் தொடர்ந்து பரிசோதிக்கப்படுகின்றன. அப்படி இருந்தும் சில தன்சல்கள் உரிய தரத்தில் பராமரிக்கப்படுவதில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எவ்வாறாயினும், கடந்த வருடத்தை விட இவ்வருடம் கூடுதலான தன்சல்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
தன்சல்கல் நடத்துவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக அது தொடர்பாக பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தன்சல் கொடுக்க விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள சுகாதார அலுவலர் அலுவலகத்திற்குச் சென்று பதிவு செய்து கொள்ளுமாறும் சங்கம் தெரிவிக்கிறது. பதிவு செய்யும் போது, பொது சுகாதார பரிசோதகர்கள், தன்சல் வழங்குவதில் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.