மனித சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் புகைத்தல் பற்றிய உலமா சபையின் அறிக்கை

Date:

குறிப்பு: கடந்த மே 31ஆம் திகதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இத்தினத்தில் புகையிலை பாவனை, சிகரெட் பாவனை போன்றவற்றின் தீங்குகள் தொடர்பாக உலகளாவிய மட்டத்தில் விழிப்புணர்வுகள் நிகழ்த்தப்பட்டன.

அந்தவகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினுடைய புத்தளம் நகரக்கிளை தேசிய தலைவர் மற்றும் தேசிய செயலாளர் நகரக்கிளை செயலாளர் ஆகியோர் வெளியிட்டுள்ள சிறப்பான அறிக்கையை வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.

புகைத்தல் என்பது சாதாரண ஒரு பழக்கமாக ஆரம்பமாகின்ற போதிலும் புகைபிடிப்பவர் மாத்திரமல்லாமல் அவர்கள் வெளியிடும் புகையை சுவாசிக்கும் புகைபிடிக்காதவர்களையும் உடல், உள ரீதியான உபாதைகளுக்கு உள்ளாக்குகின்றது.

மாரடைப்பு, பக்கவாதம், இதய நோய்கள், நுரையீரல் புற்றுநோய், நாட்பட்ட இருமல், புற்றுநோய்கள், நரம்புத்தொகுதி நோய்கள், இதயநோய்கள், சுவாசத்தொகுதி நோய்கள் என்பன அடங்குவதுடன், பல ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவதற்கும் புகையிலை உட்கொள்ளுதல், புகைத்தல் என்பன காரணமாக அமைகின்றன.
ஒருவர் ஒவ்வொரு முறை புகையிலையை நுகரும் போதும், அவரது நுரையீரலின் ஆயுள் குறைகிறது. புகைப்பவரை மட்டுமன்றி அவரை சுற்றியிருக்கும் ஜீவன்களின் உடல் நலனையும் அது பாதிக்கிறது.
உலக அளவில் சுமார் 08 மில்லியன் உயிர்கள் புகையிலையை சுவாசிப்பதனால் மாய்ந்து போவதாகவும் அவர்களில் 1.2 மில்லியன் பேர் புகைபிடிப்பவர்கள் வெளியிடும் புகையை சுவாசிக்கின்றமையினால் மரணமடைவதாகவும் உலக சுகாதார அமைப்பு நடத்திய ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
புகைத்தலினால் ஏற்படும் உயிர்ப்பலிகள் அல்லது தீயநோய்கள் ஏற்படுவதற்கான அனைத்து வழிகளையும் இஸ்லாம் முற்றாகத் தடைசெய்துள்ளது.
“உங்கள் கைகளால் அழிவினைத் தேடிக்கொள்ளாதீர்கள்.” (அல் பகரா : 195)
அல்லாஹ்வின் இறுதித்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜில்:
‘உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனிதமிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்தளவுக்குப் புனிதமானதோ, அந்தளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் பொருட்களும் உங்கள் மானங்களும் உங்களுக்குப் புனிதமானவை ஆகும்’ என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி : 67)
‘ஒருவர் தனக்குத்தானே தீங்கிழைப்பதோ, பிறருக்குத் தீங்கிழைப்பதோ கூடாது’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அல் ஹாகிம் : 2345)
மனித உயிர், சன்மார்க்கம், பகுத்தறிவு, மானம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாத்தல் என்பது இஸ்லாத்தின் அடிப்படை இலக்காகும்.
புகைத்தல் பாவனையால் மனிதன் மேற்சொல்லப்பட்ட இஸ்லாத்தின் இலக்குகளை இழந்து, தன்னையே அழிவில் போட்டுக்கொள்வதுடன் பிறருக்குத் தீங்குவிளைவிக்கிறான்.
மனித சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாகவும் தீங்காகவும் அமையும் புகைபிடித்தல் அல்லது புகையிலைப் பாவனை அற்ற தேசத்தை உருவாக்க அனைவரும் பங்களிக்கவேண்டும்.
புகைத்தல் பாவனையாளர்களை இனங்கண்டு அவர்களை அதிலிருந்து விடுபடுவதற்கான சன்மார்க்க, உளவியல்சார் உளவளத்துறை ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்குவது பள்ளிவாயல் நிர்வாகங்கள், கதீப்மார்கள், மஸ்ஜித் சம்மேளனங்கள், ஏனைய சமூக நிறுவனங்களின் தார்மீகப் பொறுப்பாகும்.
ஒருவர் புகைத்தல் பழக்கத்தில் இருந்து விடுபடுவதென்பது தன்னைச் சுற்றியுள்ள தனது உறவுகள், நண்பர்களின் உயிரையும் சுற்றுச்சூழலின் தூய்மையையும் பாதுகாத்திடச் செய்யும் பாரியதொரு பங்களிப்பாகும்.
புகைத்தல் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் வருடாந்தம் மே மாதம் 31 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் உலக புகையிலை எதிர்ப்புத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
உலகில் சுமார் 14 நாடுகள் புகையிலை மற்றும் புகைபிடித்தல் அற்ற நாடுகளாக உள்ளதாக சில தரவுகள் குறிப்பிடுகின்றன.
அவ்வாறான முன்மாதிரியான ஒரு நாடாக இலங்கையும் மாற்றப்பட வேண்டும். அல்லாஹு தஆலா எமது தேசத்தையும் சமூகத்தையும் புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பானாக!

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...