அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிறைவேற்றுக் குழுவினரின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் ஊடகக்குழுவினரின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று தெஹிவளை ‘ரோஸ்வூட் சிலோன்’ வரவேற்பு மண்டபத்தில் நேற்று (06) நடைபெற்றது.
‘மனித நேயத்திற்கான ஊடகவியலாளர்களின் பொறுப்புக்கள்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாட்டிலுள்ள அச்சு, இலத்திரனியல், டிஜிட்டல், மற்றும் சமூக ஊடகங்களில் ஊடகப்பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் ஊடகக்குழுவின் செயலாளருமான அஷ்-ஷைக் எம். பாஸில் பாரூக் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து ‘ஜம்இய்யா கடந்து வந்த பாதை’ அறிமுகக் காணொளியாகத் திரையிடப்பட்டது.
ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் ‘ஊடகவியலாளர்களுக்கான ஒழுங்கு விதிகள்’ தொடர்பிலும் ‘ஊடகவியலாளர்களுக்கு ஜம்இய்யா விடுக்கும் செய்தி’ எனும் தலைப்பில் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வியும் உரை நிகழ்த்தினார்கள்.
5 ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு 15 நிமிட அவகாசம் வழங்கப்பட்டபோது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ஜம்இய்யாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், ஊடகக்குழுவின் துணைச்செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் மற்றும் உப செயலாளர் அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம். பாஸில் ஹுமைதி ஆகியோரால் பதில்கள் வழங்கப்பட்டன.
இதில் ஜம்இய்யா சார்பில் தலைவர், பொதுச்செயலாளர், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் ஜம்இய்யாவின் அலுவலக உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.