சர்வதேச தந்தையர் தினத்துடன் இணைந்த ஈத் அல் அதா பெருநாளான நேற்று (16) காசா பகுதியிலுள்ள புரேஜ் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய தாக்குதலால் கொல்லப்பட்ட தனது மகனின் உயிரற்ற உடலைப் பிடித்துக் கொண்டு பலஸ்தீனிய மருத்துவர் அழும் காட்சி மனதை உருக்கச் செய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மத்திய மற்றும் தெற்கு காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் பலஸ்தீனியர்களில் ஐந்து குழந்தைகளும் அடங்குவர்.
இறந்த குழந்தைகளில் பலஸ்தீன மருத்துவரின் குழந்தையும் அடங்குகின்றது.
எவ்வாறாயினும் காசா பகுதியில் இஸ்ரேல் தமது இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.
காசா பகுதியை இஸ்ரேலில் இருந்து பிரிக்கும் கெரெம் ஷாலோம் எல்லைப் பகுதியில் மட்டுமே போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்குமென இஸ்ரேல் குறிப்பிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு காசாவில் மனிதாபிமான உதவிக் குழுக்கள் உள் நுழைவதற்கு அனுமதி வழங்கியே இந்த போர்நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும்இ தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபாவில் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று இஸ்ரேலிய இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் குறைந்தது 37, 337 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 85,299 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டுள்ளனர்