இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் 1187 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகார சபையின் சட்டப் பிரிவின் பணிப்பாளர் திருமதி சஜீவனி அபேகோன் தெரிவித்தார்.
ஊடக அமைச்சில் இன்று (19) இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், 907 குழந்தைகள் உடல் ரீதியான துஷ்பிரயோகம், 261 சிறிய பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் மற்றும் 146 தீவிர பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளன.
அத்துடன் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பாமை தொடர்பில் 704 வழக்குகள் பதிவாகியுள்ளதாக சட்டத்தரணி சஜீவனி அபேகோன் தெரிவித்தார்.
இங்கு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அவசர இலக்கமான 1929க்கு பெறப்பட்ட முறைப்பாடுகளில் 20% பொய்யான முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் சட்டத்தரணி வலியுறுத்தியுள்ளார்.
உண்மையான முறைப்பாட்டினை விசாரணை செய்வதற்கு அதிகாரிகளின் நேரமும் உழைப்பும் வீணடிக்கப்படுவதாகவும், அவ்வாறான பொய்யான முறைப்பாடுகளை செய்பவர்களுக்கு 175ஆவது தண்டனைச் சட்டம் பிரிவின் பிரகாரம் தவறான தகவல்களை வழங்கினால் தண்டிக்கப்பட முடியும் எனவும் சட்ட திணைக்கள பணிப்பாளர் திருமதி சஜிவனி அபேகோன் தெரிவித்தார்.