நடப்பு T20 உலகக் கிண்ண தொடரின் சூப்பர் 8 சுற்றுடன் போட்டியை நடத்தும் மேற்கிந்திய தீவுகள் அணி வெளியேறியுள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியினர் தோல்வியடைந்ததை அடுத்து அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை அவர்கள் இழந்தனர்.
ஆன்டிகுவா – சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீசியது.
கடந்த போட்டிகளில் அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்த மேற்கிந்திய தீவுகள் அணி இன்றையப் போட்டியில் ஓட்டக்குவிப்பில் தடுமாறியிருந்தனர்.
20 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை மட்டுமே குவித்திருந்தது.
அந்த அணி சார்பில் ரோஸ்டன் சேஸ் மட்டுமே சிறப்பாக துடுப்பெடுத்தாடி 52 ஓட்டங்களை குவித்திருந்தார்.
தென்னாப்பிரிக்கா அணி சார்பில் டப்ரைஸ் ஷாம்சி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில், 139 என்ற வெற்றி இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க துடுப்பெடுத்தாடிய போது மழை குறுக்கிட்டது.
இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 17 ஓவர்களில் 123 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், 16.1 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை குவித்து தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றதுடன், அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.
இதன்மூலம் மூன்றாவது முறையாக தென்னாப்பிரிக்கா அணி T20 உலகக் கிண்ண தொடரில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதுடன், 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
போட்டியின் ஆட்டநாயகனாக டப்ரைஸ் ஷாம்சி தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.