தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்துவதற்காகவும், தற்சார்புடன் வாழ ஊக்குவிப்பதற்காகவும் ‘ஊரும் உணவும் திருவிழா’ சென்னை செம்மொழி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 55 புலம்பெயர்ந்த உணவுத் தொழில்முனைவோர், 100-க்கும் மேற்பட்ட அவர்களின் பாரம்பரிய உணவு வகைகளைத் தயாரித்து வழங்குகின்றனர்.
இங்கு மொத்தம் 13 உணவு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.
இந்த உணவுத் திருவிழாவில் தமிழ்நாடு மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமீமுன் அன்சாரி கலந்துகொண்டு இலங்கைத் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளின் கண்காட்சியை கண்டுகளித்ததுடன் உணவுகளையும் ருசித்து உண்டார்.
இதன்போது தமீமுன் அன்சாரி தனது அனுபவத்தை தெரிவிக்கும் போது,
சென்னை – டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் அமையப்பெற்றிருக்கும் செம்மொழி பூங்கா வளாகத்திற்கு சென்றோம்.
மதிய உணவுக்காக யோசித்த பொழுது, இங்கு உணவு திருவிழா நடப்பதை அறிந்து வருகைத் தந்தோம்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் குறிப்பாக இலங்கையிலிருந்து அகதிகளாக வந்து தமிழ்நாட்டின் முகாம்களில் இருப்பவர்கள் தயாரித்திருக்கக்கூடிய உணவு வகைகளை அங்கு சந்தைப்படுத்தி இருந்தனர்.
1985- 1990 களில் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்களின் ஈழத் தமிழர்களின் பிள்ளைகள் இந்த திருவிழாவிலே பங்கேற்றுள்ளனர். அவர்களிடம் பேசும்போது இலங்கை தமிழின் தொனியை கேட்க முடியவில்லை .
மாறாக இங்கேயே பிறந்து வளர்ந்ததால் அவர்கள் தமிழக தொனியிலேயே அவர்களுடைய மொழியாடல் இருந்தது. இங்கு விதிவிலக்காக மியான்மர் -பர்மா உணவக கடை ஒன்றே ஒன்று இருந்தது.
பெரும்பாலும் தமிழர்கள் மறந்து போன உணவு வகைகள் – பாரம்பரிய உணவு வகைகள் என்று வகைப்படுத்தப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது.
நாங்கள் வானவில் என்று தலைப்பிட்டு இருந்த ஒரு கடைக்கு சென்றோம். அவர்கள் திருச்சி முகாமை சேர்ந்தவர்களாம். சிவப்பரிசி சோறும் -மீன் ஆணமும் ,யாழ்ப்பாண பருப்பு கறியும் வாங்கி சாப்பிட்டோம் .
அதைத் தொடர்ந்து மண் பானையில் தேங்காய் பாலில் ஊற வைத்த பழைய அரிசி சோறு ( நீர்ச் சோறு) வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு, கட்டை சம்பலுடன் தந்தார்கள். அவ்வளவு சுவையாக இருந்தது .
இலங்கையின் புட்டு , மீன் சம்பல், கேரட் சம்பல், மாசி சம்பல் ,குளிர்பானங்கள் ,கேக் வகைகள், சிற்றுண்டி வகைகள் என அவர்களின் உணவு கலாச்சாரங்களை சுவையுற தயாரித்து வைத்திருந்தனர். எங்களின் உணவுகளை உண்ணுங்கள் என்று அந்த உறவுகள் வாஞ்சையோடு உபசரிக்கின்றனர். விலைகளும் மிக குறைவாகவே இருக்கிறது.
பாரம்பரியமான – பண்பாட்டு உணவு முறைகளை விரும்பக் கூடியவர்கள் இங்கு வரலாம்.
அயலக தமிழர் நலன், ஐ.நா.வின் NCHRO உள்ளிட்டவர்களின் ஆதரவுடன் இந்நிகழ்வு நடைபெறுகிறது.
இது பாரம்பரியமான உணவுகளை ருசிப்பதற்காக மட்டுமல்ல; இத்தகைய உணவுகளை தயாரிப்பவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் நீங்கள் வருகை தருவது நல்லது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.