இலங்கையிலிருந்து பிரியாவிடை பெற்றுச் செல்லும் இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவரை கௌரவிக்கும் முகமாக அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தினால் நேற்றைய தினம் (19) கொழும்பு மெண்டரினா ஹோட்டலில் பிரியாவிடை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வினை இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கம், உலகளாவிய நீதிக்கான ஊடகவியலாளர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இலங்கைக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவதில் இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் சுஹைர் எம்.எச் செய்த் வழங்கிய பங்களிப்புக்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
மேலும் இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் இணைத் தலைவர் பிமல் ரத்நாயக்க மற்றும் உலகளாவிய நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஹத்தக தூதுவரின் பணிகளை பாராட்டி உரையாற்றினர்.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கம், உலகளாவிய நீதிக்கான ஊடகவியலாளர் சங்கம், பேருவளை அப்ரார் நிலையம், களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் ஆகியவற்றினால் தூதுவருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், என்.எம். அமீன் சட்டத்தரணி, என்.எம்.சஹீட், அவர்களுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம் சுஹைர், பலஸ்தீன தூதரகத்தின் அதிகாரிகள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அங்கத்தவர்கள், தேசிய ஷூரா சபை அங்கத்தவர்கள் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் கிளை அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் சுஹைர் எம்.எச் செய்த் அவர்கள் பலஸ்தீன் மீதுள்ள இலங்கை மக்களின் நட்புறவு தொடர்பில் தமது உணர்வுகளை கண்ணீர் மல்க எடுத்துரைத்தார்.
இறுதியில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம். அஜ்வதீன் அவர்கள் நன்றியுரையை நிகழ்த்தினார்.