நடை பயணத்தின் முலம் நாட்டை சுற்றி வரும் சாதனை பயணத்தில் சஹ்மி சஹீட் இன்று (26) வெற்றி கண்டார்.
இவரது பயணம் 13. 07. 2024 பேருவளையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. 50 நாட்களில் நாட்டைச் சுற்றிவரும் இவரது முயற்சி இன்று 47 நாட்களில் 1520 Km நடை பயணம் முடிவடைந்தமை விஷேட அம்சமாகும்.
இலங்கை வரலாற்றில் நடை பயணத்தில் நாட்டைச் சுற்றி வந்த இரண்டாவது நபராகவும், குறைந்த வயதில் நாட்டைச் சுற்றும் முதலாவது சாதனை வீரனாகவும் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
கடந்த 22. 04. 2004 ஆம்ஆண்டு “இயற்கையின் அழகை அழகுபடுத்த நாளைய சுவாசம்’ எனும் தொனிப்பொருளில் இலங்கை பாதுகாப்பு படையின் 24 ஆவது கெமுனு சேவா படைப்பிரிவின் ஓய்வுபெற்ற இரானுவ உத்தியோகத்தர் ஷெல்டன் பெரேரா 53 நாட்களில் இலங்கையை நடைபயணமாக சுற்றிவந்தார்.
அந்த வகையில் 53 நாட்களில் நாட்டைச் சுற்றி வந்த ஷெல்டன் பெரேராவின் சாதனையை 45 ஆவது நாள் பயணத்தின் முலம் சஹ்மி சஹீட் முறியடித்துள்ளார்.
அந்த வகையில் நடைபயணத்தில் நாட்டைச் சுற்றி வந்த இளம் வயதை உடைய முதலாம் வீரன் என்ற வகையில் முதலாம் இடத்தை தட்டிக் கொண்டார்.
இரவரது பயணத்தின் போது ஒவ்வொரு இடங்களிலும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொலிசார், இவருக்குத் தேவையான பாதுகாப்பினையும், இவரது உடல் ஆரோக்கியத்தையும் அவரிடம் சென்று கேட்டறிந்து, இவரது பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்து தங்களது ஆதரவை வழங்கி வந்தனர்.
இடையிடையே இரகசிய பொலிஸாரும் இவரிடம் சென்று நிலைமைகளை கேட்டறிந்து முழுமையான ஆதரவை வழங்கி வந்தனர்.
மேலும் இவரது நடை பயணத்தின் போது ஒவ்வொரு இடங்களிலும் மக்கள் இவருக்கு பரிசுகளையும் வழங்கி கெளரவித்தனர்.
இவரது பயணத்தின் போது கிழக்கு மாகான முஸ்லிம் மக்கள், மற்றும் வடபகுதி, மன்னார், கிண்ணியா, ஹெரவப்பொத்தான போன்ற பகுதி மக்களின் வரவேற்பு அபரிமிதமானது.
விசேடமாக வட பகுதி தமிழ் உறவுகள், இன, மத, சாதி பேதமின்றி இவரை வட பகுதிக்கு வரவேற்று, பாடசாலைகளில் மாணவ மாணவியர் பதையின் இரு மருங்கிலும் நின்று கை தட்டி வரவேற்று, தங்களது ஒற்றுமையையும் ஆதவை வெளிப்படுத்தினர்.
மேலும் வடபகுதி தழிழ் மக்கள் தங்களது வழ்கை பாணியிலான உணவுகளை சமைத்து வழங்கி கெளரவித்தமை இவரது ஒற்றுமைக்கான
பயணத்தை பூரிப்படைச்செய்தன.
இன்று 26.08. 2024 ஆண்டு திங்கற் கிழமை இவரது இலட்சியப் பயணத்தின் நிறைவின் போது பேருவளை நகரம் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மேடை அமைத்து, இவருக்கு வாழ்த்து தெரிவிக்க, நாட்டின் நாலா பக்கங்களில் இருந்தும் மக்கள் பேருவளையை நோக்கி படையெயடுத்து, பேருவளையில் சித்திர முக்கியத்துவம் வாய்ந்த சனத்திரள் , சன சமுத்திரம் ஒன்று கூடியது.
பேருவளை நகரம் சமுத்திர வெள்ளத்தால் மூழ்கித் தத்தளித்தது. கொடை வள்ளல் நழீம் ஹாஜியார் அவர்களின் ஜனாஸாவுக்குப் பின் பேருவளை நகரி்ல் ஒன்று கூடிய மாபெரும் சன சமுத்திரம் இதுவாகும்.
இதேபோன்றே, இவர் சென்றடையும் பிரதேசங்கள் தோறும் சகல இன, மத மக்களாலும் பெரும் வரவேற்பளிக்கப்பட்டமையை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் உணர்ந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக முஸ்லிம் கிராமங்கள், ஊர்களில் எல்லாம் மகத்தான வரவேற்புக் கிடைத்தமை குறித்தும் சஹ்மியின் உரையாடல்கள் மூலம் அறியக் கிடைத்தன.
பேருவளையில் வறிய குடும்பத்தில் பிறந்த இவர், சிறுவயது முதல் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்த நிலையில் படிக்கும் பருவத்திலேயே தந்தையை இழந்தார். இதனால் இவரது குடும்பவண்டி மேடு பள்ளம், மலை மடு என்றெல்லாம் தாண்டி நடைபயின்று கொண்டிருக்கிறது.
இந்த கரடு முரடான பயணம் இவரது சாதனை முயற்சிக்கும் கைகொடுத்துக் கொண்டுடிருக்கிறது. தந்தை எனும் துடுப்பறுந்த படகை செலுத்திய அனுபவம் இவருக்கு துணைநிற்கிறது. இந்த நெருக்கடி நிலையில் இவர் உள்ளத்தில் உதித்த சாதனை நிலைநாட்ட வேண்டும் என்ற வைராக்கிய உணர்வே இப்போது கைகூடியுள்ளது.



