சனிக்கிழமை அன்று காஸாவில் சடலமாக மீட்கப்பட்ட ஆறு பணயக் கைதிகளை மீட்கத் தவறியதற்காக இஸ்ரேல் மக்களிடம் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மன்னிப்பு கோரியுள்ளார்.
ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி அக்டோபர் 7ம் தேதி தாக்குதலின் போது பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதிகளை மீட்க முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டி நாடெங்கும் போராட்டங்கள் இரண்டாம் நாளாக தொடர்ந்த நிலையில், நெதன்யாகு மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்தநிலையில் உபகரணங்கள் பயன்பாட்டில் சர்வதேச சட்டத்தை மீறும் ஆபத்து இருப்பதாக காரணம் காட்டி, இஸ்ரேலுக்கு சில ஆயுத விற்பனையை பிரிட்டன் நிறுத்தியதால் சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்துள்ளது.
ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, எதிர்ப்பு நிலைப்பாட்டிலேயே தொடர்கிறார். இஸ்ரேல் துருப்புக்கள் காஸாவின் பிலடெல்பி பாதையை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். பிலடெல்பி பாதை எகிப்துடனான காஸாவின் எல்லையில் உள்ளது.
உத்தி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பகுதியான பிலடெல்பி பாதை, ஹமாஸ் உடனான அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டமுடியாத அம்சங்களில் ஒன்றாக உள்ளது.
ஏறக்குறைய 11 மாதங்கள் ஆகியும் தங்கள் அன்புக்குரியவர்களை சொந்த நாட்டிற்கு மீட்டு வர தவறிய நெதன்யாகு மீது கோபத்தை வெளிப்படுத்த பணயக் கைதிகளின் குடும்பங்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில், இந்த போராட்டங்களில் திங்களன்று ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு ஹமாஸால் கடத்தப்பட்ட பின்னர் 97 பணயக்கைதிகளின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லாமல் உள்ளது.
இஸ்ரேலின் ராணுவ அழுத்தம் தொடர்ந்தால் பணயக்கைதிகள் “சவப்பெட்டிகளில்” திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று திங்களன்று கூறிய ஹமாஸ், பணயக் கைதிகளை மீட்க இஸ்ரேலிய துருப்புக்கள் அணுகினால் அவர்களை கையாள பாதுகாவலர்களுக்கு “புதிய அறிவுறுத்தல்கள்” வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளது.
“பேச்சுவார்த்தைகளுக்கு பதிலாக, ராணுவ அழுத்தத்தின் மூலம் பணயக் கைதிகளை விடுவிக்க நெதன்யாகு வலியுறுத்துவது என்பது அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு சடலமான திருப்பி அனுப்பப்படுவதை ஊக்குவிப்பதாகும். அவர்கள் இறக்க வேண்டுமா அல்லது உயிருடன் இருக்க வேண்டுமா என்பதை அவர்களது குடும்பத்தினர் முடிவு செய்ய வேண்டும்,” என்று ஹமாஸ் குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மூலம்: பிபிசி