இந்தியாவின் பல பகுதிகளில் வாழும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்களும் அக்கிரமங்களும் எல்லை மீறி வருகின்றன.
குறிப்பாக மத்தியப்பிரதேஷ் மாநிலத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினருக்கு இழைக்கப்படும் அநீதிகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.
வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்த ‘குற்றத்திற்காகவும்’ அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் எனக் கூறியும் முஸ்லிம் வீடுகள் மற்றும் வணிக ஸ்தலங்கள் இடித்து தரைமட்டமாக்கி அவர்கள் நிர்க்கதியாக்கப்பட்டு வீதியில் நிறுத்தப்படுகின்றனர்.
இக்கட்டுரை மத்தியப்பிரதேஷ் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பைன்ஸ்வாஹி கிராமத்தில் நடந்த கொடுமைகளை அடிப்படையாகக் கொண்டாகும்.
அங்கு வசித்து வந்த ஜீனத் என்ற யுவதி கடந்த ஆகஸ்ட் மாதம் இறந்தபோது அவளுக்கு வயது 17 மட்டுமே.
அவள் நியுமோனியாவால் இறந்தாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது. வீட்டை இழந்து வீதியில் வசித்து வந்த காரணத்தாலேயே ஜீனத்துக்கு அந்நோய் ஏற்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு, ஜீனத் தன்னுடைய பெற்றோருடன் குடியிருந்த வீடு போலிஸ் அதிகாரிகளால் தரைமட்டமாக்கப்பட்டது, ஜீனத்தும் அவளுடைய பெற்றோரும் தெருவில் வீசப்பட்டனர். பின்னர்,அவரது தந்தை உட்பட சுமார் பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.
அதிகாரிகள் மேற்படி கொடூரமாக நடவடிக்கை எடுத்தது அவ்வீட்டில் வெடி குண்டுகள் அல்லது போதைப் பொருள் இருந்தமைக்காக அல்ல. கேவலம் உணவிற்காக சிறிதளவு மாட்டிறைச்சி வைத்திருந்தமையே அவர்கள் செய்த குற்றமாகும்.
ஆனால் இக்குற்றச்சாட்டின் பேரில் அன்று சுமார் 17 முஸ்லிம் வீடுகள் இடிக்கப்பட்டாலும் அவை அனைத்திலுமே மாட்டிறைச்சி இருக்கவில்லை என்று ஊர்வாசிகள் கூறினர்.
ஜீனத்தின் தந்தை தனது இளம் மகளின் இறுதிச் சடங்கிற்கு காவல்துறை அதிகாரிகளால் கை விலங்குகளுடனேயே அழைத்து வரப்பட்டார்.
சில சந்தர்ப்பங்களில், சட்ட விரோத கட்டுமானமன்றி சில காலத்திற்கு முன்பு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் சட்டபூர்வ இருந்தும் முஸ்லிம் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு அவை தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. சிலவேளை அது பேன்ற வீடுகளில் ஹிந்து குடும்பங்கள் குடியேற்றப்படுவதும் உண்டு.
ஜீனத்தின் அவல முடிவு ஒரு பசு மாட்டிற்க்கு ஏற்பட்ட காயத்துடன் தொடங்கியது. அதாவது, கசாப்புக்காக லொறியில் ஏற்றிச் செல்லப்பட்ட ஒரு மாடு, அதில் இருந்து குதித்து காயம் அடைய, இச்சம்பவத்தை வைத்து ஊடகம் பெரும் சர்ச்சையை கிளப்பியதுடன், அதன் பின்னர் ஜூலை 15 ஆம் திகதி காலை திடீரென ஒரு பெரிய பொலீஸ் குழு ஒன்று ஆயுதங்கள் மற்றும் தடிகளை ஏந்தியபடி பைன்ஸ்வாஹி கிராமத்திற்குள் நுழைந்து கிராமத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை சுற்றி பாதுகாப்பு ஒரு வளையத்தை உருவாக்கி அங்கிருந்த 16 வீடுகளில் வசித்தவர்கள் அனைவரையும் வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டனர், பின்னர் சில புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டு அவ்வீடுகள் எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
தங்களுடைய பொருட்களை வெளியே எடுக்கவேனும் கால அவகாசம் தருமாறு அவ்வீட்டு மக்கள் அதிகாரிகளிடம் எவ்வளவு கெஞ்சியும் அதிகாரிகள் அதற்கும் செவிசாய்க்கவில்லை. குறைந்த பட்சம் பிள்ளைகளின் பாடசாலைப் பொருட்கள், புத்தகங்கள் போன்றவற்றை எடுக்க அனுமதி கேட்டும் அதையும் அதிகாரிகள் அலட்சியமாக மறுத்துள்ளனர்.
பைன்ஸ்வாஹி கிராமத்தில் நடந்த மேற்படி சம்பவம் போன்றவை இந்தியா முழுவதும் பல இடங்களில் நடைபெறுவதைக் காணலாம். அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை கட்டவிழ்ப்பதற்கு ஹிந்து குழுக்களுக்கு அரசாங்கம் அளித்துள்ள அதிகாரப்பூர்வமற்ற சுதந்திரத்திற்கு இவை எடுத்துக்காட்டுகளாகும்.
.
முஸ்லீம்கள் மீதான இந்த வகையான கொடுமைகளுக்குப் பின்னால், ஹிந்துக்களால் தெய்வீகமாகக் கருதப்படும் பசுக்களை இறைச்சிக்காகக் கொல்லும் குற்றச்சாட்டுக்களே காணப்படுவதுண்டு.
2014 இல் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதன் பிறகு, இந்தியாவின் பல மாநிலங்களில் கறவை மாடுகளை வெட்ட தடை விதிக்கப்பட்டது. மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், மாடுகளை அறுப்பது, மாடுகளைக் கொண்டு செல்வது, இது போன்ற ‘கொடூரக் குற்றங்களுக்கு’ தண்டனை வழங்குவது பெரும்பாலும் காவல்துறையோ நீதிமன்றமோ அல்ல மோடியின் அதிகாரபூர்வமற்ற சக்திகளாகச் செயல்படும் ஹிந்து மதவெறிக் கும்பல்களே.
முஸ்லிம்கள் மாட்டிறைச்சி உண்பதற்கு இந்திய அரசு தடை விதித்தாலும், உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருப்பதுதான் இங்கு வேடிக்கையாகும்.
2023 இல் இந்தியாவில் இருந்து 1.3 மில்லியன் மெட்ரிக் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அந்த ஆண்டு 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நிய செலாவணி வருமானமாக இந்தியா பெற்றது.
இருப்பினும், தங்கள் சொந்த உணவுக்காக கால் கிலோ அரை கிலோ மாட்டிறைச்சியை எடுத்துச் சென்ற முஸ்லிம்களை கும்பல்கள் கொடூரமாக கொன்ற சம்பவங்கள் பல இந்தியாவில் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் எருமை மாடுகளை கொல்வதை தடுக்கும் சட்டம் எதுவும் கிடையாது என்ற போதிலும் போலீசார் முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றும் அனைத்து இறைச்சிகளும் பசு மாட்டிறைச்சி என்றே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதுண்டு.
அது பசு மாட்டிறைச்சியா அல்லது எருமை இறைச்சியா என்பதை உறுதிப்படுத்த இரசாயன சோதனைகள் எதுவும் செய்யப்படுவதுமில்லை.
எது எவ்வாறு இருந்த போதிலும்,இறைச்சியை ஒரு இடத்தில் கண்டு பிடித்தவுடன் எவ்வித நீதிமன்ற விசாரணையோ உத்தரவோ இன்றி விசாரணைக்கு வந்த போலீசாரே குறிப்பிட்ட வீட்டை தரைமட்டமாக்க இந்திய தண்டனைச் சட்டப் கோவையில் இடம்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.
இதற்கு சாக்காக, அனுமதியின்றி கட்டப்பட்ட வீடுகளே அவ்வாறு இடிக்கப்படுவதாக போலீசார் கூறுவதுண்டு. ஆனால் சட்டவிரோத வீடுகளை இடிக்க நீதிமன்ற உத்தரவு வேண்டாமா என்ற கேள்விக்கு அவர்களிடம் தக்க பதில் இல்லை. ஆனால், பைன்ஸ்வாஹி கிராமத்தில் இடிக்கப்பட்ட 167 வீடுகளில், ஒன்பது வீடுகள் அரசின் குறைந்த செலவு வீட்டுத் திட்டத்தில் கட்டப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டாலும், அதிகாரிகள் அது பற்றியும் எதுவும் கூறுவதில்லை.
இதேவேளை, யார் எவ்வாறு வாதிட்ட பேதிலும், பைன்ஸ்வாஹி கிராமம் மாடுகளை கொல்வதற்குப் பெயர் பெற்ற கிராமம் என்பதால், அங்கு வசிப்பவர்களின் வீடுகளை இடிப்பதை விட்டு விட்டு அவர்கள் அனைவரையும் தூக்கிலிட வேண்டும் என்று ஹிந்து கும்பலைச் சேர்ந்தவர்கள் பகிரங்கமாகவே சூலுறைக்கின்றனர்.
இந்த கும்பல்களுக்கு 2023-ல் மத்யப்பிரதேஷ் மாநில முதல்வராக பதவியேற்ற இனவாதத்திற்கு பெயர் பெற்ற மோகன் யாதவ்வின் முழு ஆசிர்வாதமும் உள்ளது என்பது அக்கும்பல்கள் இன வெறியின் எல்லையை கடக்க அவர்களுக்கு துணிவை கொடுத்துள்ளது.
மோடி ஆட்சியின் இத்தகைய நடவடிக்கைகளால் இந்து-முஸ்லிம் ஒற்றுமை மேலும் சீர்குலைந்து வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கவலை தெதரிவிக்கின்றனர். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ஹிந்து முஸ்லிம் இனங்களுக்கு இடையே இப்போது இருப்பது போல் இடைவெளி இருக்கவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முஸ்லிம்களைத் துன்புறுத்தும் போக்கைக் காட்டி நிரந்தரமாக ஆட்சியில் இருக்க முடியும் என்று மோடி நினைத்தார், ஆனால் கடந்த பொதுத் தேர்தல் முடிவுகள் மோடியின் அந்த நம்பிக்கையைத் தகர்த்து சுக்கு நூறாக்கியது. அதன் பின் ஆட்சியில் நீடிக்க சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டிய கேவலமான நிலையும் மோடிக்கு ஏற்பட்டது.
கடந்த பல காலமாக மோடி அரசு, அனுமதியற்ற கட்டுமானக் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் வணிகஸ்தலங்களை இடித்துத் தள்ளத் தொடங்கியது.
இதற்காக JCB வகை புல்டோசர்களே பயன்படுத்தப்பட்டதால், கடந்த தேர்தல் பிரச்சார மேடைகளிலும், பேரணிகளிலும் புல்டோசர்களின் படங்களை காட்சிப்படுத்துவது மோடி ஆதரவாளர்களின் வழமையாக இருந்தது.
அதன் மூலம். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் துன்பம் தொடரப்படும் என்ற செய்தியை ஹிந்துக்களுக்கு அவர்கள் மறைமுகமாக தெரிவித்தனர். ஆனால், பொதுத் தேர்தல் முடிவுகள், மோடியின் இனவாத போக்கை மக்கள் அங்கீகரிக்கவில்லை என்பதையே உறுதிப்படுத்தியது.
இது குறித்து கருத்து தெரிவிக்கும் அரசியல் அவதானிகள், அடோல்ஃப் ஹிட்லரும் யூதர்களுக்கு எதிராக புல்டோசர்களை பிரயோகித்ததாக குறிப்பிட்டு விட்டு ஆனால் இறுதியில் ஹிட்லரின் உடலைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போன அவல நிலையையும் நினைவு படுத்துகின்றனர்.