மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய குருணாகல் பகுதியைச் சேர்ந்த இருவரை இன்று புதன்கிழமை (23) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருணாகலைச் சேர்ந்த நபரொருவருக்கு கண்ணில் ஏற்பட்டுள்ள வெண்படல நோயை குணப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மென்றசா வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சீயோன் தேவாலயத்தில் போதகருடன் தொடர்பு கொண்டுள்ளார்.
இதனையடுத்து நோய் ஏற்பட்டவரும் அவருக்கு உதவியாக இருவருமாக குருணாகலில் இருந்து பிரயாணித்து இன்றையதினம் காலை மட்டக்களப்பை வந்தடைந்து குறித்த சீயோன் தேவாலயத்துக்கு செல்வதற்காக இடம் தெரியாது அந்த பகுதியில் நடமாடிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இவர்கள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடி வருவதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸ் அவசர சேவை இலக்கத்துக்கு தெரிவித்ததையடுத்து உடனடியாக பொலிஸார் அந்த இடத்துக்கு சென்று 35, 25 வயதுடைய இருவரையும் கைது செய்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரது கைவிரல் அடையாளம் பெற்று விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.