அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் வசிக்கும் இஸ்லாமியர்கள் கமலா ஹாரிசை புறக்கணித்து டொனால்ட் டிரம்ப்புக்கு அதிகளவில் வாக்களித்துள்ளனர்.
கடந்த முறை இங்கு ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்ற நிலையில் இப்போது கமலா ஹாரிஸை இஸ்லாமியர்கள் புறக்கணித்தது ஏன்? டொனால்ட் டிரம்ப் எப்படி இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற்றார்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப். ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். நேற்று தேர்தல் நடந்தது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவில் ஜனாதிபதி என்பவர் எலக்ட்ரோலல் காலேஜ் ஓட்டுகள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
மொத்தம் அங்கு 50 மாகாணங்களில் 538 எலக்ட்ரோலல் காலேஜ் ஓட்டுகள் உள்ளன. இந்த எலக்ட்ரோலல் காலேஜ் ஓட்டுகள் என்பது மாகாணங்களின் மக்கள்தொகையை பொறுத்து மாறுபடும். மொத்தமுள்ள 538 எலக்ட்ரோலல் வாக்குகளில் 270 எலக்ட்ரோலல் வாக்குகள் பெறுவோர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
அதன்படி இன்றைய வாக்கு எண்ணிக்கையின்போது குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 277 எலக்ட்ரோலல் வாக்குகளை பெற்றிருந்தார்.
இது பெரும்பான்மையை விட 7 ஓட்டுகள் அதிகமாகும். இதன்மூலம் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமலா ஹாரிஸ் வெறும் 224 எலக்ட்ரோலல் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார்.
இந்நிலையில் தான் ஜனாதிபதி தேர்தலில் இஸ்லாமியர்கள் கமலா ஹாரிசை கைவிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தின் டியர்பார்ன் எனும் நகரம் உள்ளது. இந்த நகர் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் நிறுவனரான ஹென்றி ஃபோர்டின் சொந்த ஊராகும். அதோடு ஃபோர்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளதன் டெட்ராய்ட்டு பகுதியாகவும் டியர்பார்ன் அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த டியர்பார்ன் நகரில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ளனர். இந்த நகரில் மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 55 சதவீதம் மக்கள் இஸ்லாமியர்கள் ஆவார்கள்.
இங்கு கமலா ஹாரிசை விட டொனால்ட் டிரம்ப் அதிக ஓட்டுகளை பெற்றுள்ளார். இதில் பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த வம்சாவளியினராகவும், வடஆப்பிரிக்காவை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.
காசா மீதான போர், லெபனான், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவது, பலஸ்தீனத்தின் காசா மீதான இஸ்ரேலின் போர், இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி வருவது, மற்றும் மத்திய கிழக்கில் தொடர்ந்து நிகழும் பதற்றமான சூழல் உள்ளிட்டவற்றால் இஸ்லாமியர்கள் தற்போது ஜனாதிபதியாக உள்ள ஜோ பைடனின் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசை கைவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் இந்த நகரத்து மக்கள் ஜோ பைடனை ஆதரித்தனர். ஆனால் ஜோ பைடன் அரசு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டுள்ளதால் தற்போது கமலா ஹாரிசை அவர்கள் கைவிட்டுள்ளனர்.
மேலும் மிக்சிகன் மாகாணத்தில் டியர்பார்ன் நகரில் வாழும் மக்கள் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதையும், கமலா ஹாரிசுக்கு எதிராக இருப்பதையும் முந்தைய கருத்து கணிப்புகள் வெளிப்படுத்தி இருந்தன.
அதன்படி தற்போது தேர்தலிலும் அந்த கருத்து கணிப்புகள் கூறிய விஷயம் அப்படியே எதிரொலித்துள்ளது. முன்னதாக கடந்த வாரம் டொனால்ட் டிரம்ப் டியர்பார்ன் நகருக்கு சென்றபோது பெரிய அளவில் கூட்டம் இல்லாமல் இருந்தது.
ஆனாலும் கூட டொனால்ட் டிரம்புக்கு ஹெம்ட்ராம்க் மற்றும் டியர்போர்ன் இஸ்லாமிய மேயர்களின் ஆதரவு இருந்தது மட்டுமின்றி டிரம்பின் மருமகன் மைக்கேல் பவுலோஸ் (டொனால்ட் டிரம்ப் மகள் டிப்பனி டிரம்பின் கணவர்) லெபனான் நாட்டை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கர்.
இவரும் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக இருந்தார். இது இஸ்லாமிய ஓட்டுகளை ஒன்றிணைக்க உதவிய நிலையில் டியர்போர்ன் நகரில் கமலா ஹாரிசை விட டொனால்ட் டிரம்புக்கு அதிக ஓட்டு என்பது கிடைத்துள்ளது.