பள்ளிவாசல்கள் இருக்கும் இடத்தில் இந்து கோயில்கள் இருந்தது என உரிமை கொண்டாடும் எந்த வழக்குகளையும் இனி எந்த நீதிமன்றமும் விசாரிக்கக்கூடாது” என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்கள் சட்டம் கடந்த 1991ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, 1947இல் வழிபாட்டுத் தலமாக எப்படி இருந்ததோ, அதை நிலை தொடரச் செய்ய வேண்டும்.
ஆகஸ்ட் 15, 1947க்குப் பிறகு, வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையை மாற்றினால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அதாவது, ஒரு மதத்தின் வழிபாட்டுத் தலத்தை மற்ற மதத்தின் வழிபாட்டுத் தலமாக மாற்றவும், ஒரே மதத்தில் இருக்கும் ஒரு பிரிவின் வழிபாட்டுத் தலத்தை மற்ற பிரிவின் வழிபாட்டுத் தலமாகவும் மாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சமீபகாலங்களாக வடஇந்தியாவில் இருக்கும் பள்ளிவாசல்கள் , முன்பு இந்து மதத்தின் வழிபாட்டுத் தலங்களாகவும் இருந்ததாகவும், இன்னும் சில இடங்களில் சட்டத்தையும் மீறி இடிக்கப்படுவதாகவும் வழக்குகள் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில்தான், வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991இன் அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.வி.சஞ்சய் குமார், கே.வி .விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது.
அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ”பள்ளிவாசல்கள் இருக்கும் இடத்தில் இந்துக் கோயில்கள் இருந்தது என உரிமை கோரும் வழக்குகளை விசாரிக்கக் கூடாது.
வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான புதிய சிவில் வழக்குகளை நாட்டில் உள்ள எந்த ஒரு விசாரணை நீதிமன்றமும் விசாரிக்கக் கூடாது.
இந்த வழக்கு நீதிமன்றத்தின் முன்பு உள்ளதால், வழிபாட்டுச் சட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை வேறு எந்த நீதிமன்றமும் புதிய வழக்கைப் பதிவு செய்யக்கூடாது” என உத்தரவிட்டுள்ளது.
மேலும், இதுதொடர்பாக மத்திய அரசு 4 வாரங்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் பகுதியில் உள்ள ஷாஹி ஜமா பள்ளிவாசல்களை , இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டிருந்தாக தொடரப்பட்ட வழக்கில், மசூதியை ஆய்வு செய்ய உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அடுத்து, ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவை இந்துக் கோயிலை இடித்து கட்டுப்பட்டுள்ளதாக இந்து அமைப்பின் சார்பில், உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதைத் தொடர்ந்து, வாரணாசியில் உள்ள ஞானவாபி பள்ளிவாசல், மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா பள்ளிவாசல் என பல்வேறு மசூதிகள், இந்து கோயில்களை இடித்துக் கட்டப்பட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்தில்கூட, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஃபதேபூரில் 185 வருட பழைமையான பள்ளிவாசலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. இந்த மசூதியின் ஒருபகுதி தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி அதிகாரிகள் இடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.