அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் ஆண் மற்றும் பெண் என்ற, இரண்டு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் எனவும் திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை என்றும் திருநங்கைகளுக்கு எதிரான சட்டத்தில் முதல் நாளே கையெழுத்திட உள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப் , தான் பதவியேற்க உள்ள முதல் நாளிலேயே “திருநங்கைகளின் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துவோம்” என்று பேசியுள்ளார்.
ஃபீனிக்ஸ், அரிசோனாவில் இளம் பழமைவாதிகளுக்கான நிகழ்வில் பேசிய டிரம்ப்,
“குழந்தைகள் இடையேயான பாலியல் சிதைவை நிறுத்தவும் , திருநங்கைகளை இராணுவத்திலிருந்து வெளியேற்றுவேன், எங்கள் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து வெளியேற்றுவேன்.
பெண்களின் விளையாட்டுகளில் இருந்து ஆண்களை விலக்கி வைப்பேன். ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும்.
இதற்கான நிர்வாக உத்தரவுகளில் முதல் நாளே கையெழுத்திடுவேன்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆண், பெண், மூன்றாம் பாலினம் தாண்டி உலகம் முழுக்க பல பாலின கொள்கைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. அமெரிக்காவில் இந்த பல பாலின கொள்கைகள் உச்சம் பெற்றுள்ளன. முக்கியமாக ஆணாக உணரும் பெண்கள், பெண்ணாக உணரும் ஆண்கள், இரு பாலினமாக உணரும் ஆண்கள் என்று பல கொள்கைகள் உருவாகி உள்ளன.
உலகம் முழுக்க முப்பாலினம் என்பது தாண்டி தற்போது LGBTQ என்ற பதம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக LGBT, LGBT+, LGBTQ+, மற்றும் LGBTQIA+ என பல வார்த்தைகளால் இந்த பதம் அழைக்கப்படுகிறது.
அமெரிக்க போன்ற நாடுகளில் இந்த LGBTQ பிரிவினர் அதிகம் உள்ளனர். அங்கே கொள்கைகள் இன்னும் வெளிப்படையாக இருப்பதால் LGBTQ பிரிவினர் இன்னும் வெளிப்படையாக இயங்க முடிகிறது.
அமெரிக்காவில் தற்போது பல பாலின கொள்கைகள் அதிகரித்து வருகின்றன. இதை டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எதிர்த்து வருகிறார். அவரின் தீவிர வலதுசாரி கொள்கையின்படி இரண்டு பாலினம் மட்டுமே உள்ளது. மற்ற கொள்கைகள் எல்லாம் உண்மை கிடையாது. அது நோய் பாதிப்பு. அதை சரி செய்ய வேண்டும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.