புகையிலை எதிர்ப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இளைஞர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகவும் ஜனவரி 1 முதல் இ-சிகரெட் எனப்படும் மின் சுருட்டை தடை செய்ய ஐரோப்பிய நாடான பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.
புகையிலை பயன்பாட்டால் உலகளவில் 8 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பெல்ஜியத்தில் பரவலாக கிடைக்கக்கூடிய இ-சிகரெட்டால் ஏராளமான இளைஞர்கள் புகையிலை பயன்பாட்டிற்கு அடிமையாகுவதாகவும் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
15-24 வயதுடையவர்களிடையே ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த இ-சிகரெட்டுகள் பிரபலமாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது
இதையடுத்து பெல்ஜியம் அரசுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் இ-சிகரெட் விற்பனைக்கு முடிவு கட்டும் நோக்கில் தடையை பெல்ஜியம் அரசு அறிவித்துள்ளது.
பெல்ஜியத்தை தொடர்ந்து ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் அரசுகள் இ-சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க திட்டமிட்டு வருகின்றன. அதேநேரம் ஐரோப்பிய யூனியனின் அங்கம் இல்லாத பிரிட்டனும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல்
இ-சிகரெட் விற்பனைக்கு தடையை அமல்படுத்த உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் 2040 ஆம் ஆண்டுக்குள் புகையிலை இல்லாத தலைமுறையை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாரம்பரிய புகையிலை பொருட்களை புகைப்பதை விட இ-சிகரெட் குறைவான தீங்கு விளைவிக்கும் என்று சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படுகிறது.
மேலும் வண்ணமயமான பேக்கேஜிங், விரல்களில் மோசமான புகை நாற்றத்தைத் தவிர்ப்பதன் நன்மை, ஆப்பிள், தர்பூசணி உள்ளிட்ட மயக்கம் தரும் சுவைகளுக்காக இளைஞர்களிடையே பெருமளவில் பிரபலமாக உள்ளது.
ஆனால் இ-சிகரெட்டுகளில் இன்னும் நிகோடின் இருப்பதால், இது அதிக போதைப்பொருளாக உள்ளதாக விமர்சகர்கள் அஞ்சுகின்றனர்.