காசாவில் கடந்த 15 மாதங்களாக நீடித்த போருக்குப் பிறகு, உலகம் ஆவலுடன் எதிர்பார்த்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து காசா முழுவதும் மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை , ஹமாஸ் தனது ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மூன்று பெண் கைதிகளின் பட்டியலை மத்தியஸ்தர்கள் வழியாக இஸ்ரேலுக்கு ஒப்படைத்தது. இதைத் தொடர்ந்து, போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டது.
காசாவில் வசிக்கும் ஒருவர் கூறுகையில் , “எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. போர் நிறுத்தத்தை அறிவித்தவுடன், நான் காசா நகரத்திற்கு செல்ல தயாராகி, எனது அனைத்து பொருட்களையும் கட்டிக்கொண்டேன். என் குழந்தைகளும் உற்சாகமாக உள்ளனர். எங்கள் குடும்பங்களை மீண்டும் சந்திக்க மிகுந்த மகிழ்ச்சி,” என அவர் தெரிவித்தார்.
மற்றொருவர், “இப்போது இஸ்ரேலியர்கள் இந்த போர் நிறுத்தத்தை மீற மாட்டார்கள் என்று நம்புகிறேன். நான் என் கல்வியை முடிக்க விரும்புகிறேன். இந்த போரின் போது பல கனவுகள் அழிக்கப்பட்டன,” என தனது அச்சத்தையும் ஆசையையும் பகிர்ந்தார்.
காசாவின் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களும் மக்களுடன் இணைந்து கொண்டாடுகின்றனர். ஆவலுடன் பகிரப்பட்ட வீடியோக்களில், மக்கள் வெற்றி முழக்கமிடுவது, துப்பாக்கிச் சூடு, மற்றும் வாணவேடிக்கைகள் இடைவிடாது ஒலிப்பதை காண முடிகிறது.
அல் ஜசீராவின் செய்தியாளர் ஹனி மஹ்மூத் கூறுகையில், “போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து எந்த வித மீறல்களும் பதிவாகவில்லை. தெருக்களில் மகிழ்ச்சியின் சத்தம் மட்டுமே கேட்கிறது. இனி குண்டுகள் அல்லது ட்ரோன்களின் சத்தம் இல்லை,” என தெரிவித்தார்.
போரால் பாதிக்கப்பட்ட மக்கள், குறிப்பாக குழந்தைகள், மகிழ்ச்சியுடன் மீண்டும் வாழ்க்கையில் கனவுகளை நிலைநிறுத்த ஆர்வமாக உள்ளனர். உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு இப்போது மேலும் வலுப்பெறுகிறது.