சில தினங்களுக்கு முன், நோய்வாய்ப்பட்ட நிலையில் காலமான புத்தளம் மாவட்ட முன்னாள் உலமா சபைத் தலைவரும் காசிமிய்யா அரபுக்கல்லூரியின் முன்னாள் அதிபரும் புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் இணைத் தலைவருமான அஷ்ஷெய்க். அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வொன்று நேற்றைய தினம் (21) காசிமிய்யா அரபுக்கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்கள் கலந்துகொண்ட இந்நினைவேந்தலில் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களுக்கும் தங்களுக்கும் இருந்த ஆழமான உறவு பற்றியும் அவர்களால் புத்தளம் பகுதியில் ஏற்பட்ட நல்ல விளைவுகள் பற்றியும் தனிப்பட்ட குணநலன்கள் பற்றியும் சிலாகித்து கூறினார்கள்.
காசிமிய்யா அரபுக்கல்லூரியின் தற்போதைய அதிபர். அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பின் இணைத் தலைவர்களில் ஒருவரான சுந்தரராம குருக்கள் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தனது உரையில், இந்து மத பணிகளுக்காக தான் புத்தளத்துக்கு வருகை தந்தது முதல் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களின் மறைவு வரை தங்களுக்கிடையில் இருந்த ஆத்மார்த்த உறவு பற்றிக் குறிப்பிட்டதுடன் அவருடைய இழப்பு உண்மையிலேயே சமூகத்துக்கும் பிரதேசத்துக்கும் தனிப்பட்ட வகையில் குடும்பத்துக்கும் ஒரு இழப்பு என சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக அப்துல்லாஹ் ஹஸரத் எவ்வாறு வாழும் காலத்திலேயே பல விடயங்களில் முன்மாதிரியாக இருந்தாரோ அதேபோல தன்னுடைய பிள்ளைகளையும் கூட அவ்வாறு உருவாக்கிச் சென்றுள்ளார்கள் என்பதற்கான உதாரணங்களையும் குறிப்பிட்டார்.
இங்கிலாந்து பயணத்தின் போது அப்துல்லாஹ் ஹஸரதின் மூத்த மகன் தன்னை வரவேற்ற முறை ,தனது தந்தையைப் போன்ற கெளரவத்தை தனக்கு வழங்கியதையெல்லாம் சிலாகித்து உணர்வுபூர்வமாக பேசிய அவர், இந்த முன்மாதிரி எல்லோராலும் காட்டப்பட முடியாதது. இந்தளவு தூரம் தன் பிள்ளைகள் பிறரை மதிக்கின்ற நிலைக்கு உருவாக்கி சென்றுள்ளமையானது உண்மையில் மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம்.
அது மட்டுமன்றி புத்தளம் நகரில் இந்துக்களின் மத ஊர்வலத்துக்கு இருந்து வந்த இடைஞ்சலை அழகாக தீர்த்து வைத்தமை அன்னாரின் அளப்பரிய சேவையாகும் எனவும் நினைவு கூர்ந்தார்.
அதேபோல காசிமிய்யா மாணவர்கள் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களுடைய முன்மாதிரியை பின்பற்றி அவர்களும் இப்பணியில் ஈடுபட்டு அவர்களைப் போல பணிகளை செய்யவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மாவட்ட சர்வம மத ஏனைய உறுப்பினர்களான புத்தியாகம ரத்ன தேரரும் கிறிஸ்தவ மத தலைவர்களான அருட்தந்தை கெனடி ,மற்றும் யொஹான் ஜெயராஜ் ஆகியோரும் அப்துல்லாஹ் ஹஸ்ரத் பற்றிய நல்ல நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
காசிமிய்யா அரபுக்கல்லூரியின் நிர்வாக சபைத்தலைவர் எஸ்.ஆர். எம்.முஹம்மில், நிர்வாக உறுப்பினர் அஷ்ஷைக். பாரிஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இந் நிகழ்ச்சியில், மாவட்ட சர்வமத செயற்குழு உறுப்பினரான அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
இங்கிலாந்தை வசிப்படமாகக் கொண்ட அப்துல்லாஹ் ஹஸ்ரத்துடைய மூத்த மகன் கலாநிதி அயிஷான் மஹ்மூத் நன்றியுரை வழங்கினார்.
புத்தளம் பிரதேசத்தில் எவ்வளவு ஆழமான சமூக நல்லிணக்கம் காணப்படுகிறது என்பதனை பறைசாற்றுகின்ற மற்றுமொரு மிகச்சிறந்த நிகழ்வாக இந்த நினைவேந்தல் நிகழ்வு அமைந்திருந்தது என்றால் அது மிகையாகாது.