அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்பின் குடியுரிமை காலக்கெடு உத்தரவால் தம்பதிகள் பலரும் பெப்ரவரி 20ஆம் திகதிக்குள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என கருதி மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகிறார்கள்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட ட்ரம்ப், எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம் என பல்வேறு தடாலடியான அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் முக்கியமாக, பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக குடியுரிமை பெறும் நடைமுறையை ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்தார்.
இந்த புதிய உத்தரவு 30 நாட்களில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கர்ப்பமாக உள்ள தம்பதிகள் மருத்துவமனைகளுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள செல்கிறார்கள். 20ஆம் திகதிக்குள் குழந்தை பெற்றுக் கொள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெறுகிறார்கள். டெலிவரி திகதிக்குள் குழந்தை பிறக்க வேண்டும் என்றால் சிசேரியன்தான் செய்ய வேண்டும்.
எனவே தற்போது சிசேரியனுக்கு நாட்கள் குறிக்கப்பட்டு மருத்துவமனைகளில் முன்பதிவுகள் நடக்கின்றன. பெப்ரவரி 19ஆம் திகதிக்குள் பிறகு அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அமெரிக்க குடிமக்கள் ஆக முடியாது.
இதனால் 8 மாதம், 9 மாத கர்ப்பிணிகள் மருத்துவர்களை சந்தித்து சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு நாள் குறித்துள்ளனர்.
7 மாத கர்ப்பிணிகள் கூட , சிசேரியன் செய்து குழந்தையை எடுத்துவிட்டால் எப்படியாவது இன்குபேட்டரில் வைத்தாவது வளர்த்துக் கொள்ளலாம் என கருதுகிறார்கள்.
அது போல் அமெரிக்க குடியுரிமை அல்லாத பெற்றோரிடம் கிரீன் கார்ட் இல்லாவிட்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அமெரிக்க குடியுரிமை கிடைக்காது.
இதனால் கிரீன் கார்ட் பெறவும் பலர் வரிசையில் காத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் எச்-1பி, எல் 1 உள்ளிட்ட தற்காலிக விசாக்களுடன் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள்.
இனி அமெரிக்காவுக்கு பல்வேறு கனவுடன் செல்லும் வெளிநாட்டினர் ட்ரம்ப் உத்தரவால் முடிவை மாற்றிக் கொள்ளும் சூழல் நிலவுகிறது.
ஆனால் பிரசவ திகதிக்கு முன்பே சிசேரியன் மூலம் குழந்தைகளை பிரசவிப்பது ஆபத்தானது என்று அமெரிக்க மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2 அல்லது 3வது மாத தொடக்கத்தில் உள்ள இந்திய கர்ப்பிணிகளும் குறை பிரசவத்துக்கு முயற்சிப்பதாக கூறப்படுகிறது.