இந்தியா – கத்தார் நாடுகளின் உறவை பலப்படுத்தும் வகையில் சில முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
கத்தார் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி – பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பில் இரண்டு நாட்டின் வர்த்தகத்தை இரட்டிப்பாக்க.. அதாவது 28 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கத்தார் நாட்டு அமீர் (அரசர்) ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி இந்தியா வருகை புரிந்தார். தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, ஷேக் தமீம் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்தியா வந்துள்ளதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அப்போது எரிசக்தி, வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் இந்தியா – கத்தார் இடையே ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு, நிதிமுறைகேடுகள் தவிர்ப்பு, பொருளதார கூட்டுறவு, ஆவண காப்பகத் துறை ஒத்துழைப்பு, இளைஞர் நலன் விளையாட்டு ஆகியவற்றிலும் ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்தியாவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்வதற்கு கத்தார் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருநாட்டின் வருடாந்திர வர்த்தகத்தை 28 பில்லியன் டாலராக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது இந்திய மதிப்பில் ரூ.2.40 லட்சம் கோடியாகும். தற்போது இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 14 பில்லியன் டாலராக உள்ள நிலையில், அதை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
தீவிரவாத எதிர்ப்பு, சைபர் க்ரைம் மோசடி ஆகிய முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. உலகளவில் உள்ள பொருளாதாரம், தீவிரவாதத்துக்கு எதிரான ஒருங்கிணைப்பு ஆகியவை குறித்தும் இருநாட்டு தரப்பில் ஆலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா – கத்தார் வர்த்தகம் குறித்து அதிகம் உரையாடப்பட்டது. எரிசக்தி, தொழில்நுட்பம், ஆரோக்கியம், உணவு பதப்படுத்துதல், மருந்து, ஆகியவற்றில் இரண்டு நாடுகள் இணைந்து பணியாற்றும்.
இந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி தலைமையில் கத்தார் நாடு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியா – கத்தார் உறவிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த உறவை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும் வகையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து கத்தார் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கத்தார் நாட்டி வர்த்தக நண்பர்களில் இந்தியா முக்கியமானது.
இந்தியா – கத்தார் இடையே நீண்ட காலமாக புரிந்துணர்வு உள்ளது. வர்த்தகம், பொருளாதாரம், முதலீட்டில் இருநாடுகளும் நன்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இதை இன்னும் வலுப்படுத்தி இரு நாட்டுக்கு இடையயான நட்புறவின் மூலம் முன்னேற்றம் அடைவதற்கான திட்டங்களை இந்த சந்திப்பு நிகழ்த்தியுள்ளது.” என்று கூறியுள்ளது.
விரைவில் குஜராத்தில் கத்தார் நாட்டின் தேசிய வங்கி திறக்கப்படவுள்ளது. இதன் மூலம் வர்த்தகத்தை தங்கள் நாட்டு பணத்திலேயே பரிவர்த்தனை செய்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக கத்தார் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.