இஸ்லாமிய மார்க்க பேச்சாளர் டாக்டர் ஜாக்கீர் நாயக் மலேசியாவில் உரை நிகழ்த்துவதற்கு எந்தவொரு தடையும் பிறக்கப்படவில்லை என அந்நாட்டு உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு அவர் உரை நிகழ்த்துவதற்கு எதிராக தற்காலிக தடை போடப்பட்டிருந்தது. ஆனால் நடப்பில் அந்த தடையானது அமலில் இல்லை என்று சைஃபுடின் நசுத்தியோன் விளக்கம் அளித்தார்.
முன்னதாக, இஸ்லாமிய போதகர் டாக்டர் ஜாக்கீர் நாயக் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகளில் உரையாற்ற 2019ஆம் ஆண்டு அரசாங்கம் போட்ட தடை இன்னும் அமலில் உள்ளதா என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் கேட்ட கேள்விக்கு சைஃபுடின் இவ்வாறு பதிலளித்தார்.
இந்தியா மும்பையைப் பிறப்பிடமாக கொண்ட டாக்டர் ஜாக்கீர் நாயக் உலகளாவிய பிரபல பேச்சாளர் ஆவார். சமீபத்தில் டாக்டர் ஜாக்கீர் நாயக் குறித்து தவறான தகவலை சொன்னதற்கு பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமிக்கு உயர் நீதிமன்றம் RM1.42 மில்லியன் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.