வானொலி முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட அறிவிப்பாளர், பன்னூலாசிரியர், கலாபூஷணம், அல்ஹாஜ் எம்.இஸட் அஹமட் முனவ்வர் அவர்களின் ‘ஆயிரமாவது குத்பா அஞ்சலும்- வரலாறும்’ நூல் வெளியீட்டு விழா நாளை (22) பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு 7 இல் உள்ள புதிய நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த விழா அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொருளாலர் அஷ்ஷெய்க் கலாநிதி அஸ்வர் அஸாஹிம் தலைமையில் நடைபெறவுள்ளது.
பிரதம அதிதிகளாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, இலங்கை பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ், தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி லபார் தாஹிர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.நவாஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி பைஸர் முஸ்தபா, முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சூபி தரீக்காக்களுக்கான சுப்ரீம் கவுன்சில் தலைவர் அல்ஹாஜ் அஷ்ஷெயித் நகீப் மெளலான, விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல்.எம். நவவி ஆகியேர் கலந்துகொள்ளவுள்ளனர்.
நூலாய்வினை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் நிகழ்த்தவுள்ளார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி அவர்களும் இன்னும் பல வர்த்தக பிரமுகர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், நிர்வாகிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
‘நாவுக்கு அரசர்’ ‘இலக்கியச் செம்மல்’ ஏ.ஜி.ஏ அஹமட் ரிபாயி, அல்ஹாஜ் நியாஸ் அஹமட், அல்ஹாஜ் எஸ்.எம். முபாரக் அலி ஆகியோரும் தென்னிந்தியாவிலிருந்து இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றார்கள்.
வெளிநாட்டு விசேட அதிதியாக மௌலானா அஷ்ஷெய்க் அஸ்ஸெய்யித் அப்துல் காதிர் அல்காதிரி அல்அஸ்ஹரி கலந்துகொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வில் விசேட அம்சங்களாக உலமா பெருந்தகைகளும் ஊடகப் பெருந்தகைகளும் 8 தசாப்தங்கள் தாண்டிய ஆசிரியப் பெருந்தகைகளும் கௌரவிக்கப்படவுள்ளனர்.