காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பால் பணயக் கைதியாக இருந்தபோது, யூத மதத்தின் முக்கிய விடுமுறைகளை அனுஷ்டிப்பதற்கும், மத வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டதாக அண்மையில் விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய படை வீரர் அகம் பெர்கர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய நாளிதழான Yedioth Ahronoth தனது நேர்காணலில் பெர்கர் இந்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.
முக்கிய இஸ்ரேலிய பணயக் கைதியான அகம் பெர்கர் உட்பட மூன்று இஸ்ரேலியர்கள் அண்மையில் ஹமாஸ் அமைப்பால் விடுவிக்கப்பட்டனர்.
பெர்கர் தனது அனுபவங்களை விவரிக்கையில், சிறையில் இருக்கும்போது பிரார்த்தனை புத்தகங்கள் உட்பட மதசார்ந்த பொருட்களை பெற்றபோது தானும் மற்ற கைதிகளும் ஆச்சரியமடைந்ததாக தெரிவித்துள்ளார். “அது எவ்வாறு நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் எங்களிடம் பிரார்த்தனை புத்தகங்களை ஒப்படைத்தனர்,” என்று அவர் கூறினார்.
யூத மதத்தின் முக்கியமான தினங்களில் ஒன்றான யோம் கிப்பூர் விடுமுறையை அவர் எவ்வாறு அனுபவித்தார் என்று கூறுகையில், “நாங்கள் நோன்பு நோற்றோம், அன்று நிறைய பிரார்த்தனை செய்தோம்,” என நினைவுகூர்ந்தார்.
இதேவேளை, கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்பட்ட பலஸ்தீனியர்கள், இஸ்ரேலிய சிறைகளில் துன்புறுத்தல், மருத்துவ உதவியின்மை மற்றும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது போன்ற சிக்கல்களை சந்தித்ததாக புகார் அளித்துள்ளனர்.
இஸ்ரேலிய சிறைகளில் கடுமையான துஷ்பிரயோகம் காரணமாக பலர் விடுவிக்கப்பட்டவுடன் நேரடியாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர் .
சிலர் தங்கள் குடும்பங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் நீண்டகால விசாரணைகள் உட்பட உளவியல் சித்திரவதைக்கு ஆளானதாகவும் தெரிவித்தனர். பெர்கர் விவரித்த நிலைமைகளைப் போலல்லாமல், பலஸ்தீன கைதிகள், மத புத்தகங்கள், பிரார்த்தனை நேரங்கள் பெரும்பாலும் மறுக்கப்படுவதாகக் கூறுகிறார்கள்.
இஸ்ரேலிய சிறைச்சாலை அமைப்பு தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான பலஸ்தீன கைதிகளை வைத்திருக்கிறது.