ஹட்டனுக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் இ.போ.சபை பஸ்ஸில் பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளாரென போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும் நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இ.போ.ச பஸ் நடத்துனர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு முடியும்வரை அவர் சேவையில் உள்ளீர்க்கப்படமாட்டார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விசேட கொள்கையொன்றினை அரசாங்கம் வகுத்திருக்கும் சூழ்நிலையில் இப்படியானவற்றை அனுமதிக்க முடியாதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நுவரெலியா பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் ஏறிய போது, அந்த மாணவர்களை பஸ்ஸில் இருந்து இறங்குமாறு குறித்த பஸ் நடத்துநர் குறிப்பிட்டு முறையற்ற வகையில் நடந்துக் கொண்ட காணொளி சமூக வலைதளங்களில் பெரும் கருத்தாடல்களை உருவாக்கியது.
கினிகத்தேனை கடவளை பிரதேசத்திலுள்ள தமிழ் பாடசாலையொன்றை சேர்ந்த மாணவர்கள் ஹட்டன் டிப்போவுக்கு சொந்தமான பஸ்ஸில் ஏறிய போது, சீசன் டிக்கட் உள்ளவர்கள் என்பதால் அவர்களை பஸ்ஸில் இருந்து இறங்குமாறு நடத்துனர் குறிப்பிட்ட நிலையில், அது தொடர்பில் மாணவர்களுக்கும் நடத்துநருக்கும் இடையிலான வாக்குவாதம் இடம் பெறுவது தொடர்பான வீடியோவொன்று சமூக வலைத்தளங்களில் பரிமாற்றப்பட்டுள்ளது.