காசா மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்!

Date:

காசா பகுதி, தெற்கு லெபனான் மற்றும் தெற்கு சிரியா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தை உள்பட 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள போதிலும், இஸ்ரேல் தரப்பில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், கடந்த இரண்டு வாரங்களாக காசா பகுதிக்குள் உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் செல்வதை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி உள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களில் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்தனர் என்று காசா சுகாதார துறை தெரிவித்துள்ளது.

காசாவின் சுகாதார துறை செய்தி தொடர்பாளர் கலில் டெக்ரான் மத்திய காசாவில் உள்ள அல் அக்சா மருத்துவமனையில் இருந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றிய தகவல்களை வழங்கியுள்ளார்.

போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை முடிவற்றது என்றும், தொடர்ந்து விரிவாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘பணயக் கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் தொடர்ச்சியாக தாமதம் காட்டி வருகிறது. அதேபோல் இவ்விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் தூதர், மற்றும்பிற மத்தியஸ்தர்களின் ஆலோசனைகளையும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதையடுத்து காசா மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளோம். இந்த நிமிடம் முதல் ஹமாஸுக்கு எதிரான இராணுவ பலம் படிப்படியாக அதிகரிக்கப்படும்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காசா , டெய்ர் அல்-பலா, கான் யூனிஸ் மற்றும் ரஃபா உள்ளிட்ட பல இடங்களைத் தாக்கிய இந்தத் தாக்குதல்கள், போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து நடத்தப்பட்ட தீவிரமான இஸ்ரேலிய தாக்குதல் ஆகும்.

ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்த குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கியதால், இறந்தவர்களில் பலர் குழந்தைகள் என்று பலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாக்குதல்கள் நடந்தவுடன், தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பு இஸ்ரேல், டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துடன் கலந்தாலோசித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

இஸ்ரேல் – காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மூன்று கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பலஸ்தீன கைதிகள் விடுதலைக்கு ஈடாக, ஒவ்வொரு கட்டமாக ஹமாஸ் தன் வசமுள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்கும். விடுவிக்கப்படும் ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக் கைதிக்கும் 30 பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது நிபந்தனை.

கடந்த 2023 அக்டோபர் 7ம் திகதி தாக்குதலில் பிடித்துச் செல்லப்பட்ட மீதமுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்கா விட்டால், நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் எச்சரித்திருந்தார்.

இந்த எச்சரிக்கைகள் பல கட்டங்களாக, பல விதமாக கொடுக்கப்பட்ட நிலையில் பணயக் கைதிகள் விடுவிப்பில் ஹமாஸ் எந்த முன்னேற்றமும் காட்டாததைச் சுட்டிக் காட்டி இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...