இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக யாழ்ப்பாண முஸ்லிம்களின் அமைப்புகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Date:

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் மீண்டும் மேற்கொண்டுள்ள தாக்குதல்களுக்கு எதிராக யாழ்ப்பாண முஸ்லிம்களின் அமைப்புகள்  21ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து முஹம்மதியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தது.

இந்த நிகழ்வில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் அப்துல் பரீத் ஆரிப், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சரபுல் அனாம், இளைஞர் கழக தலைவர் அப்துல்லாஹ் ஆகியோர் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இப்போராட்டத்தில் பள்ளி நிர்வாகிகள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன்போது இஸ்ரேலுக்கு எதிரான கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சர்வதேச சட்டத்தை மீறி இஸ்ரேல் நடத்தியுள்ள அதிர்ச்சியூட்டும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் அந் நாட்டு சியோனிச ஆட்சியின் அப்பட்டமான போர் நிறுத்த மீறலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். முஸ்லிம்கள் நோன்பு நோற்று வரும் புனித ரமழான் மாதத்தில் காசாவில் 400க்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு கொண்ட குண்டுவெடிப்புகளை இஸ்ரேல் மீண்டும் ஆரம்பித்து,  இரண்டு மாத கால போர்நிறுத்தத்தை மீறியுள்ளமை எங்களால் வன்மையாகக் கண்டிக்கப்படுகின்றது. இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தத்தின் முதல் கட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

காசா மற்றும் பிராந்தியத்தின் பிற பகுதிகளில் அமைதியைச் சீரழிக்கும் காரியங்களில் அறவே ஈடுபடாதிருக்கும் அப்பாவிப் பொதுமக்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்களையும், இன ஒழிப்பு நடவடிக்கைகளையும் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருகின்றது.

யெமன், சிரியா மற்றும் லெபனான் ஆகியவற்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய அண்மைய தாக்குதல்களின் மூலம் பொதுமக்களையும், பெண்களையும் , சிறுவர்களையும் குழந்தைகளையும் காயப்படுத்துவதையும், படுகொலை செய்வதையும், நிவாரணப் பணியாளர்களை நோக்கி இடைவிடாமல் தாக்குதல் தொடுப்பதையும் நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். மக்களுக்கு வழங்கும் நிவாரண உதவிகளைக் கூட சட்டத்தை மீறி இஸ்ரேல் தொடர்ந்து தடுத்து வருகின்றது.

இஸ்ரேலின் கடுமையான நிலைப்பாட்டிற்கு அமெரிக்கா ஆதரவளிப்பது மிகவும் கவலையளிக்கின்றது, இது இஸ்ரேல் தண்டனையிலிருந்து தப்பிக்கும் செயல்களைத் தீவிரப்படுத்துகிறது.

இஸ்ரேலிய சியோனிச ஆட்சியின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா கையாண்டு வரும் தவறான கொள்கைகளுக்கு எதிராக அவசரமாக கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுக்கவும் அரபுத் தலைவர்களை நாங்கள் வேண்டிக் கொள்கின்றோம்.

இறைமையுள்ள அயல் நாடுகள் மீதான இஸ்ரேலின் அச்சுறுத்தல் இஅவற்றிற்கு ஏற்படுத்திவரும் பேரழிவு மற்றும் ஐ.நா. தீர்மானங்களை மீறிச் செயற்படுவது என்பவை சமமாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. சர்வதேச சட்டங்களை மீறிவருவது பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கும் இஸ்ரேலே பொறுப்பேற்க வேண்டும், பாதுகாப்புச் சபையிடம் முறையிட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

தகவல்; பாரூக்பதீன் ஆசிரியர்

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...