எம். எல். எம். தெளபிக்
சகோதரன் ருஷ்திக்கு இழைக்கப்பட்ட அநீதியின் பிண்ணனியில் இலங்கையின் நிகழ்கால அரசியல் களத்தின் கொந்தளிப்பை வீரியப்படுத்தியிருக்கும் பிரதான காரணிகளுள் ஒன்றாக பயங்கரவாதத் தடைச்சட்டம் (Prevention of Terrorism Act) குறித்த கருத்தாடல் மேலெழுந்துள்ளது.
பல்வேறு தரப்புகளும் இது தொடர்பில் வேறுபட்ட வாதங்களை முன்வைக்கின்றனர். இத்தகையதொரு சூழ்நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்றால் என்ன? அதன் உள்ளீடுகள் யாவை? அது எப்போது எதற்காகக் கொண்டுவரப்பட்டது? அது ஏற்படுத்திய விளைவுகள் எத்தகையவை? அது எவ்வாறான குறைபாடுகளை உட்கொண்டுள்ளது? ஏன் இச் சட்டம் மாற்றத்துக்குள்ளாக்கப்பட
வேண்டும் போன்ற பல கேள்விகள் எமக்கு முன்னால் தோன்றி மறைகின்றன.
“ஓவ்வவொரு பிரஜைக்கும் உரித்தான அடிப்படை மனித உரிமைகளைப் பேணுதல்,
பாதுகாத்தல், உத்தரவாதப்படுத்துதல், நடைமுறைப்படுத்தல் என்பன நவீன ஜனநாயக அரசுகளின் பிரதானமான பணியும் பொறுப்புமாகும். இலங்கை போன்ற பன்மைத்துவ நாடுகளில் சமத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல், பொருளாதார, சமூக, சமய, மொழி ரீதியான உரிமைகளைக் கையாள வேண்டிய மேலதிக பொறுப்பும் அரசுகளுக்கு இருக்கின்றன.
எனினும் சுதந்திரத்தின் பின்னர் மாறிமாறி ஆட்சிபீடமேறிய அரசாங்கங்களின் செயற்பாடுகள் இது விடயத்தில் ஒருதலைப்பட்சமாக இருந்தமையினாலேயே சுதந்திர இலங்கையின் வரலாற்றுப் பக்கங்கள் இன மோதல்களாலும் பயங்கரவாத நடவடிக்கைகளாலும் நிறப்பப்பட்டுள்ளன.
இவற்றின் பெறுபேறாகவே அரசின் இயலாமையை மறைக்கவும் மக்களை அடக்கவும்
வன்மையான சட்ட ஏற்பாடுகள் கொண்டுவரப்படுகின்றன”
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுவரும் பயங்கரவாதத் தடைச் சட்டம், 1979ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி திரு ஜே. ஆர். ஜெயவர்த்தன தனக்கிருந்த நிறைவேற்றதிகாரத்தை அதியுச்சளவில் பயன்படுத்தியும் தனது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கிருந்த 5/6 பெரும்பான்மைப் பலத்தின் வலிமையைக் கொண்டும் அவசரவசரமாக பாராளுமன்றத்தால் நிறைவேற்றியதாகும்.
இதன்போது அறிவுபூர்வமான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறுவதற்கான கால அவகாசமோ, சந்தர்ப்பங்களோ வழங்கப்படவில்லை. ஆரம்பத்தில் தற்காலிகமாகக்
கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்ட இச்சட்டம் 1982 ஆம் ஆண்டு நிரந்தரமாக்கப்பட்டு, கடந்த 40 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்டுகின்றது.
அளவுக்கு மீறிய பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக் கொண்ட சகல அரசாங்கங்களும் இவ்வாறு சர்வாதிகாரப் போக்கில் செயற்பட்டமையே
சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையின் அரசியல் வரலாராகும்.
நாட்டின் இறையாண்மைக்கும் தேசியப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக ‘இருக்கலாம்’ எனக்கூறி எவரையும் எச்சந்தர்ப்பத்திலும் எத்தகைய நியாயமான காரணமோ அல்லது நீதி விசாரணையோ இன்றி கைது செய்வதற்கும் கால வரையறையின்றி தடுப்புக்காவலில் வைப்பதற்குமான வாசலை
இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் அகலத் திறந்துவிட்டுள்ளது.
இவ்வேற்பாடு பிறப்பினால் ஒரு பிரஜைக்குக் கிடைக்கவேண்டிய அடிப்படை மனித உரிமைகளை (கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம்) சவாலுக்குட்படுத்தி அவற்றை அர்த்தமற்றதாக்கியுள்ளது.
ஆட்சிபீடமேறுகின்ற அரசாங்கங்களும் ஆளும் அதிகார வர்கத்தினரும் வெளிப்படைத் தன்மை, பொறுப்புக் கூறல் ஆகிய ஜனநாயக விழுமியங்கள் மற்றும் நல்லாட்சிப் பண்புகளைப் புதைத்துவிட்டு தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான வலையமைப்பை பலப்படுத்திப் பாதுகாப்பதற்கும் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தவும் ஊழல், மோசடிகள் உள்ளிட்ட தமது இரசியங்களை மறைப்பதற்குமான திறந்த உபாயமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது என்ற காரணத்தைத் தேசிய
மயப்படுத்துவதன் மூலம் எத்தகைய வெளிப்படையான அல்லது உண்மையான சான்தாரங்களோ அல்லது நீதி மன்ற உத்தரவுகளோ இன்றி, சந்தேக நபர்கள் எனக் கருதப்படும் பிரஜைகளைக் குற்றம் நிரூபிக்கப்படாமலேயே அநியாயமாகக் கைது செய்து நீண்ட நெடுங்காலம் தடுப்புக் காவலில் வைக்கின்ற அத்துமீறலை இச்சட்டம் அரங்கேற்றி விடுகின்றது.
இங்கு மக்களின் பாதுகாவலனாக இருக்கவேண்டிய அரசே தனது பிரஜைகளின் மீது மிலேட்சத்தனத்தை பிரயோகிக்கின்ற போக்கு மேலோங்கிச் செல்வதை அவதானிக்கலாம். இதன் மூலமாக பிரஜைகளின் மீது அரச பயங்கரவாதம் (State Terrorism) தலைதூக்கி விடுகின்றது.
ஒரு பிரஜை தான் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, கடுமையான சித்திரவதைகளுக்கோ வன்கொடுமைகளுக்கோ உட்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டும்போது அது தொடர்பான நீதி விசாரனைகளை முன்னெடுத்து,
பாதிப்புக்குள்ளாகியவருக்கு நீதி வழங்குவதற்குப் பகரமாக
குற்றச்சாட்டை நிரூபிக்கின்ற பொறுப்பைக் குற்றம் சுமத்தியவரின் தலையிலேயே சுமத்தி விடுகின்ற அநீதியும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இடம்பெறுகின்றது.
ஏற்கனவே தனக்கு இழைக்கப்பட்டிருக்கும் உரிமை மீறலாள் உளவியல் ரீதியாகவும் உடலியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கும் நபரை வெந்த புன்னில் வேல் பாய்த நிலைக்கு இது தள்ளிவிடுகின்றது.
இந்தியாவையோ அல்லது ஐக்கிய அமெரிக்காவையோ போன்று வலுவானதும் சுயாதீனத் தன்மையுடன் கூடியதுமான சுதந்திர நீதித்துறை இலங்கையில் நிறுவப்படவில்லை. நீத்தித்துறைச் சுயாதீனமின்றி இலங்கையின் நீதித்துறைக் கட்டமைப்பே பலவீனப்பட்டிருப்பதனாலும் அதன் மீதான அரசியல் அழுத்தஙகளும் தலையீடுகளும் அதிகம் என்பதால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அநியாயமாகக் கைது செய்யப்படும் ஒரு பிரஜைக்கு நீதி கிடைப்பதற்கான
வாசல்கள் இலகுவில் திறக்கப்படுவதில்லை.
நீதித்துறையின் சுயாதீனத் தன்மை பலத்த கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகியுள்ள நாடுகளில் பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற சட்ட ஏற்பாடுகள் தனிமனத சுதந்திரம், சமூக நீதி, தேசிய அபிவிருத்தி போன்றவற்றிலும் மிக மோசமான
எதிர்மறை விளைவுகளையே தோற்றுவித்துள்ளன.
பொதுவாக சாதாரன சட்டங்களின் கீழ் கைது செய்யப்படும் ஒரு பிரஜை, கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள்ளாக அல்லது சில சந்தர்ப்பங்களில் 48 மணித்தியாளங்களுக்குள்ளாக நீதி மன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டுமெனவும் நீதிமன்றமே நீதி விசாரணையின் பின்னர் கைதுசெய்யப்பட்ட பிரஜையை தடுப்புக்காவலில் வைக்க வேண்டுமா? இல்லையா?
எனத் தீர்ப்பலிக்கும் என்பதே குற்றவியல் தொடர்பான அடிப்படைச் சட்ட விதியாகும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் உள்ளீடுகள் இந்ந அடிப்படைச் சட்டவிதியை வலுவிழக்கச் செய்துள்ளன.
இதனால் இச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட ஒருவரை மாதக்கணக்கில்
அல்லது வருடக்கணக்கில் வழக்கு விசாரனைகள் இன்றியும் தான் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கு முடியாதவாறும் தடுத்துவைக்கின்ற ஜனநாயக விரோதச் செயல் நடந்தேறுகின்றது.
சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதிக் கோட்பாடுகளினதும் மனித உரிமைத் தத்துவங்களினதும் அடிப்படையே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஒரு பிரஜை குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதியாவார் என்பதாகும்.
ஆனால், இலங்கையில் பின்பற்றப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம் இத்தத்துவத்தை புறந்தள்ளிவிட்டுள்ளதோடு, ஒரு நிரபராதி எவ்வாறு நடாத்தப்பட வேண்டும் என்பதற்கான சட்ட வரையறைகளையும் அவரது உரிமைகளையும் இருட்டடிப்புச் செய்துள்ளது.
பாரிய குற்றங்களைச் செய்து, குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளியை விடவும் பலமடங்கு கேவலமான முறையில் விசாரனைக்காத் தடுத்துவைக்கப்படும் பிரஜைகள் இச் சட்டத்தின் கீழ் நடாத்தப்படுவது மனிதத்துவத்திற்கு எதிரான செயலாகும்.
கைதிகளின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் தொடர்பான பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகள் இலங்கையில் அமுலிலிருக்கும் நீதிமன்ற நடைமுறைகளுக்கும் நீதிக் கோட்பாட்டுக்கும் எதிரானதாகும்.
சாதாரன குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும் பிரஜைகளிடம் பொலிஸ் அதிகாரிகளோ அல்லது வேறு அரச அதிகாரிகளோ அல்லது தடுப்புக் காவலின்போதோ பெற்றுக்கொள்ளப்படுகின்ற குற்ற ஒப்புதல் வாக்கு மூலம், குற்றவியல் வழக்குகளின் போது அனுமதிக்கப்பட்ட சாட்சியங்களாக நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டதென இலங்கையின் தடயவியல் உத்தரவுச் சட்டம் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
ஏனெனில், இத்தகைய வாக்கு மூலங்கள் பலவந்தமாகவோ அல்லது வலுக்கட்டாயமகவோ அல்லது உடலியல் ரீதியான நோவினைகளை ஏற்படுத்துவதன் மூலமோ பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம் என்பதே அதற்கான காரணமாகும்.
ஆனால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேற்குறிப்பிடப்பட்ட மாதிரியிலான குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்கள் குற்றத்தை நிரூபிப்பதற்கான போதிய சான்றாதாரமாக நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றமை நகைப்புக்கிடமான அதேநேரம் எவ்விதத்திலுமே ஏற்றுக்கொள்ள முடியாத அம்சமாகும்.
இது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அகோர முகத்தையும் இலங்கை நீதித்துறையின் வங்குரோத்து நிலையையும் அதன் மீதான அரசியல் தலையீட்டின் ஆழத்தையுமே வெளிப்படுத்துகின்றன.
எனவே, இன்நிலை மாற்றியமைக்கப்பட்டு இலங்கையில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப் படுகின்ற தண்டனைச் சட்டக் கோவை, குற்றவியல் நடவடிக்கைகளுக்கான சட்டக் கேவை மற்றும் சான்றுகள் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழ் அனைத்துவிதமான குற்றச் செயல்களையும் கையாழ்வதற்கேற்ற விதமாக இலங்கையின் சட்டமுறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 9ஆம் பிரிவின் 1ஆம் பகுதியில் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவிற்கமைய குற்றச் சாட்டுக்கள் எவையுமின்றி ஆட்கள் எவரையும் கைது செய்யவும் அவர்கள் ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என ஆராய்ந்து முடிவு காண்பதற்காக 18 மாதங்கள் வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்கள் 72 மனித்தியால காலப்பகுதிக்குள் தீதிமன்றின் முன் ஆஜராக்கப்பட வேண்டுமென சட்டத்தில் கூறப்பட்டாலும் மிகவும் குறைவாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அவ்வாறு நீதி மன்றில் ஆஜராக்கப்பட்டாலும் கைது சட்டபூர்வமானதா அல்லது சட்டவிரோதமானதா எனத் தீர்ப்புச் சொல்லும் அதிகாரம் நீதிமன்றுகளுக்கு வழங்கப்படவில்லை.
பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலிலிருந்துவரும் கடந்த 40 வருட அனுபவத்தை சீர்தூக்கிப் பார்க்கும் போது கைது செய்யப்பட்டவரை வழக்கு முடிகின்ற வரைக்கும் தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதற்காகவே அரசாங்கங்களினால் நீதி மன்றங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.
இதற்கும் ஒருபடி மேலே சென்று வழக்குகள் தொடரப்படாமலேயே பல வருடங்களாக விசாரனை என்ற பெயரில் அநியாயமாகத் தடுத்துவைக்கின்ற அராஜகமும் இச்சட்டத்தின் மூலம் நடந்தேறி வருகின்றன.
பாதுகாப்பு அமைச்சரும் அரச படையினருமே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சகல விதமான அதிகாரங்களையும் பெற்றுள்ளர். அவர்கள் நினைப்பவற்றை சாதித்துக் கொள்வதற்கான கருவியாக இச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. இந்நிலை ஜனநாயகத்தின் எல்லைக் கோடுகளை தாண்டிய சர்வாதிகாரப் போக்கையே வெளிப்படுத்துகின்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் பாதுகாப்புத் தரப்பினரின் விசாரனையின் பின்னர் குற்றவாளி தீர்மானிக்கப்பட்டால் அதுவே இறுதி முடிவாகுமென இச்சட்டத்தின் 10ஆம் பிரிவின் 9ஆம் பகுதி குறிப்பிடுகின்றது.
இந்த முடிவை எதிர்த்து பாதிக்கப்பட நபர் இலங்கையிலுள்ள எந்த நீதித்துறை நிறுவனத்திலோ அல்லது தீர்ப்பாணயத்திலோ மனுத் தாக்கல் செய்யவோ, கேள்வி எழுப்பவோ முடியாது எனவும் இப் பிரிவு வலியுறுத்துகின்றது.
இவ்வேற்பாட்டுக்கு முன்னால் ஒட்டுமொத்த நீதித் துறையும் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள அராஜகமே நடந்தேறியுள்ளது.
திட்டமிட்டு அநியாயமாக குற்றவாளியாக்கப்பட்ட ஒரு நிரபராதி தப்பிப்பதற்கான சகல சந்தர்பபங்களும் இச்சட்டத்தினூடாக கடினப்ப்பட்டுள்ளதமை இதன் பாரதூரத்தை மேலும் வலுப்படுத்துகின்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவர் விடுதலை பெற்ற பின்னரும் அவரது நடமாட்ட சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகள் மீது பாதுகாப்பு அமைச்சினால் பலத்த கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமென இச்சட்டத்தின் 11ஆவது பிரிவு குறிப்பிடுகின்றதது.
இந்நிலையானது மனிதன் ஒரு சமூக செயற்பாட்டுப் பிரஜை என்ற அடிப்படையைத் தகர்த்து சமூகத்தின் மைய நீரோட்டத்திலிருந்து ஒரு நிரபராதி புறமொதுக்கப்படுவதற்கான வழிகளையும் திறந்து விடுவதோடு அவர் உள ரீதியான நெக்கீடுகளுடனும் அச்ச உணர்வுடனும் வாழவேண்டிய நிர்ப்பந்தத்தையும்
ஏற்படுத்திவிகின்றது.
தொகுத்து நோக்கும் போது, அனைத்துலக மனித உரிமைகள் பிரகடம் (Universal Declaration of Human Rights – UDHR) சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் (International Covenant on Civil and Political Rights – ICCPR) என்பன குறிப்பிடுகின்ற அடிப்படையான தனிமனித, சமூக, சமய, அரசியல் மற்றும் சிவில் உரிமைகளை இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டம் கபளீகரம் செய்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் நீண்டகாலமாக் குற்றம் சுமத்தப்படுகின்றது.
குறிப்பாக இந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் பல்லின சமூக அமைப்பைக் கொண்ட இலங்கையில் சிறுபான்மை சமூகங்களின் குரல்வலையைக் குதறி, அவர்களை நாட்டின் பிராதன செயற்பாட்டுக் தளத்திலிருந்து ஓரங்கட்டி விளிம்புநிலைச் சமூகங்களாக மாற்றியுள்ளதாகவும் விமர்சிக்கப்படுகின்றது.
அவ்வாறே ஆளுகின்ற தரப்புகளின் நிலைப்பாடுகளுக்கு எதிரான போக்குடைவர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறித்து சர்வதிகாரப் போக்கை நியாப்படுத்தும் கருவியாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
பல்லினத் தேசங்களில் சிறுபான்மை சமூகங்கள் தொடர்சியாக உரிமை
மீறல்களுக்கு உள்ளாகின்ற போது அல்லது கல்விக்கான வாயப்புகள், தொழில் வாய்ப்பு மற்றும் வள ஒதுக்கீடு என்பவற்றில் புறக்கனிக்கப்படுவதாக அல்லது தமது இருப்பும் அது சார்ந்த வளங்களும் பாதிப்புக்குள்ளகின்றது என அவர்கள் உணரும்போது அவற்றைப் பாதுகாத்துக் கொள்வதற்கான எதிர்ச் செயற்பாடுகள் எழுச்சியடைவதும் பின்னர் பெரும் போராட்டமாக அவை மாற்றடைவதும் சர்வதேச அரங்கில் பொதுவாக இடம்பெறுகின்ற தோற்றப்பாடாகும்.
இத்தகைய எழுச்சிகளை அடக்குவதற்காக அரசுகள் பலாத்காரத்தையும் ஆயுதப் பலத்தையும் பிரயோகிக்கின்ற போது இறுதி விளைவாக அவை பயங்கவாத செயற்பாடுகளில் முடிவடைகின்றன.
இதனால் பாரிய பொருளாதார இழப்பு, உயிர்ச் சேதம், சமூகப் பிளவு, சமாதானமும் சகவாழ்வும் சாத்தியமற்றுப் போதல் என்பனவே அறுவடையாக எஞ்சுகின்றன. இத்தகைய நிலைமைகளின் பின்ணணியிலேயே பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற சிக்கலான சட்ட ஏற்பாடுகளை அரசுகள் பிறப்பிக்கின்றன.
இறுதியாக, இலங்கையைப் பொருத்தமட்டில் இனப் பிரச்சினையும் அதனோடிணைந்த வன்முறை, பலாத்காரம் என்பவற்றுக்கு அடிப்படைகள் முழுமையாக தொற்று நீக்கம் செய்யப்படாமல் நாட்டை நிலையான அபிவிருத்தி என்ற புளியை நோக்கி இலகுவில் நகர்த முடியாது.
இலங்கையில் நீண்டகாலமாக நிலைத்திருக்கும் இனப் பிரச்சினையின் வேர்களை முற்றாகத் துண்டிக்கும் விதத்திலான இலங்கைக்கேயுரிய அரசியல் தீர்வுப் பொறிமுறை ஒன்றைக் கட்டமைப்பதை நோக்கி அரச தலைவர்களும் அதிகார வர்க்கத்தினரும் திரும்ப வேண்டும்.
அப்போதுதான் இலங்கைச் சமூகங்கள் நல்லிணக்க வாழ்விற்குள் நுழைதல், பல்கலாசாரத் தன்மையை அங்கீகரித்தல் என்ற விசாலமான
மனப்பாங்கு மாற்றத்தின்பால் செல்வதற்கான உள்ளக் சூழல் உருவாக வழி பிறக்கும். இவற்றுக்கான தடுப்புச் சுவராகவே இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சடட்டம் இருந்து வருகின்றது.
எனவே இச் சட்டம் மாற்றத்திற்குள்ளாக்கப்படாதவரை அல்லது நீக்கப்படாதவரை மேற்சொன்ன நிலைமாற்றத்தின் பால் இந்த நாடு செல்வதற்கான கதவுகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படமாட்டாது.