வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு: இஸ்லாமியர்கள் அல்லாதோர் உறுப்பினராகலாம் என்ற திருத்தத்திற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம்

Date:

அடுத்த விசாரணை திகதி வரை மத்திய வக்பு கவுன்சில் அல்லது மாநில வக்பு வாரியங்களில் எந்த நியமனங்களும் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதாவது, வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாதவரை உறுப்பினராக நியமிப்பதை இந்த உத்தரவு நிறுத்தி வைத்துள்ளது.

வக்பு (திருத்த) சட்டம் (ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) கடந்த 8ம் திகதி அமலுக்கு வந்தது.

இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஏ.ஐ.எம்.ஐ.எம், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் மொத்தம் 73 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றில், இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ளது என்றும், இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, வக்பு (திருத்த) சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை நேற்று தொடங்கியது.

மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, ராஜீவ் தவன், சி.யு.சிங் உள்ளிட்டோர் ஆஜராயினர்.

மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். நேற்றைய விசாரணையின்போது, 3 முக்கிய அம்சங்களை நீதிபதிகள் எழுப்பினர்.

வக்பு திருத்த சட்டத்தில் இடம்பெற்றுள்ள சில பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதிக்க விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இடைக்கால தடை விதிப்பதற்கு மத்திய அரசும் சில மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக தங்கள் தரப்பு வாதத்தை எடுத்துரைக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்டனர்.

இதையடுத்து, இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (17) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இன்று விசாரணை தொடங்கியதும், இந்த வழக்கில் எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம் என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வலியுறுத்தினார். இந்த சட்டத்தின் சில விதிகளை நீதிமன்றம் நிறுத்தி வைத்தால் அது ஒரு “கடுமையான நடவடிக்கையாக” இருக்கும் என வாதிட்டார்.

அப்போது தலைமை நீதிபதி சஞ்சய் குமார், “சட்டத்தின் சில விதிகள் நிறுத்தி வைக்கப்படாவிட்டால், களத்தில் நிலைமை மாறக் கூடும். பொதுவாக, ஒரு சட்டத்தை நிறுத்தி வைப்பது அரிது. ஆனால், நிலைமை கடுமையாக மாறக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்று கூறினார்.

அதற்கு, அடுத்த விசாரணை திகதி வரை வக்பு (திருத்தம்) சட்டம், 2025-இன் பிரிவு 9 மற்றும் 14இன் கீழ் மத்திய வக்பு கவுன்சில் அல்லது மாநில வக்பு வாரியங்களுக்கு எந்த நியமனங்களும் செய்யப்படாது என சொலிசிட்டர் ஜெனரல் உத்தரவாதம் அளித்தார்.

அவரது உத்தரவாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம், அதனை தனது இடைக்கால உத்தரவாக பதிவு செய்தது. மேலும், பயனர் சொத்துகளின் வக்பு சொத்துக்கள் அனைத்தும் அடுத்த விசாரணை தேதி வரை ரத்து செய்யப்படக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து வழக்கை மே 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், அப்போது சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடித்தன்மைக்கு சவால் செய்யும் மனுக்களுக்கு மத்திய அரசு தனது பதிலை தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...