மேயர்….சமூக விழிப்புணர்வூட்டும் சீசனல் சிறுகதை!

Date:

ஏழு பேர் வசிக்கும் அந்த ஏழைக் குடில்,

அதன் வழமையான ஒரு அதிகாலையை கடந்துகொண்டிருந்தது…

வியாழக்கிழமை, அன்று ஒரு போயா தினம் என்பதால் தலையணையை கட்டிக்கொண்டு தூங்கும் பிள்ளைகள்…

இன்னும் எழுந்திருக்கவில்லை…!
###
காலையுணவிற்காக மரவள்ளிக்கிழங்கை அவித்துக்கொண்டிருந்த சபீனா, கதவு தட்டும் சப்தம் கேட்க…
‘யாராகயிருக்கும்..?’ என்ற எண்ணத்தோடு, வாயிலுக்கு வந்தாள்…
வாயிலில் புன்னகையுடன் நின்றிருந்தவர்களை பார்த்ததும்…
கண்கள் ஆச்சரியத்தில் விரிய… “உள்ளுக்க வாங்க சேர்.. வாங்க….” என அழைத்தும் அழைக்காமலும் உள்ளே ஓடினாள்…
“என்னங்க.. அவசரமா எழும்பி வாங்க… நம்ம மேயரும் அவங்கட பொஞ்சாதியும் வீட்டுக்கு வந்திருக்கிறாங்க… “
“நம்ம வீட்டுக்கா.. நல்லா பார்த்தியா…?” கண்களை கசக்கிக் கொண்டு எழுந்தவன்…
“கொஞ்சம் கதைச்சிக்கொண்டிரு இந்தா வாரன்…” என முகம் கழுவ விரைந்தான்…
####
“ரமீஸ் காலைல வந்து டிஸ்டர்ப் பண்றதுக்கு மன்னிக்கணும்… எப்படி சொகமெல்லாம் ?”
“நல்லம் சேர்.. இருக்கிறோம்…”
“ஒவ்வொரு சனிக்கிழமையும் நான் ஒரு வட்டாரத்துக்கு விசிட் பண்றேன்…
அங்க ஏதாவது ஒரு வீட்டுல அரை நாள் ‘ஸ்பென்ட்’ பண்ணி அவங்கட பிரச்சினைகளை பார்த்து, கேட்டு வெளங்குறது என்னுடைய பணிக்கு மிகவும் உதவியா இருக்குது… இன்றைக்கு இந்த வட்டாரம்… இருக்கப்போறது உங்கட வீடு…!”
சொல்லிக்கொண்டே புன்னகைத்த வாறு, அவர்களது முகத்தைப் பார்த்தான்…
கண்களில் ஆனந்த வெளிச்சத்தோடும், அதேவேளை இவர்களை எவ்வாறு கவனித்துக்கொள்ளப் போகிறோம் என்ற சங்கடத்தோடும் மனைவியைப் பார்த்தான் றமீஸ்…
“நேத்தே தெரிஞ்சிருந்தா உங்களுக்கு காலம்பற சாப்பாடு ரெடிபண்ணிஇருப்பேனே sir…”
“இல்ல தங்கச்சி, இன்னைக்கு நாங்க நோம்பு… அதோட வழமையாகவே நான் சொல்லாமல் இப்படி விசிட் பண்றதுக்கான காரணமே உங்களைப்போன்றவங்களுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது என்பதுதான்…”
வழமையான உரையாடல்கள் தொடர…
மேயரின் மனைவியும் சபீனாவும் பேசிக்கொண்டே உள்ளே நகர்ந்தார்கள்…
###
“சொல்லுங்க ரமீஸ்… எப்படி போகுது வாழ்க்கை…?
வட்டாரத்துல என்ன விஷேஷம்…? என்ன பிரச்சினைகள் face பண்ணுறீங்க..?
பொதுவாக பேச ஆரம்பித்தான்…
“சரியான தொழில் இல்ல சேர்… மேசன் வேலைக்கு போரேன், ஒரு நாளைக்கு இருந்தா இன்னொரு நாளைக்கு வேலை இல்ல…
போன கிழமை பூரா மழை… வேற ஏதாவது தொழில் செய்ய ஏழுமான்டு யோசிக்கிறேன்…”
“அடிக்கடி தொழில மாத்துரதைவிட, தெரிஞ்ச தொழில்ல நல்லா முன்னேற முயற்சிக்குறது நல்லது…”
பேசிக்கொண்டிருந்த வாறே, அலுவலகத்துக்கு அழைப்பெடுத்து எதோ வினவினான்.
“ரமீஸ் எனக்குத் தெரிந்த ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி இது… இவங்கள்ட்ட தொடர்ந்து வேலை இருக்கு. கட்டாயம் நாளைக்கு போய் கதைங்க நான் அவங்களோட இண்டைக்கு பேசுறேன். காலைல போகும்போது ஒபீஸ் வாங்க ஒரு கடிதம் தருவாங்க எடுத்துட்டு போங்க..”
பேசிக்கொண்டிருக்கும் போதே பக்கத்து வீட்டில் ஏதோ பொருட்கள் உடைவதுபோல் பலமான சப்தம் கேட்டது…!
###
எழுந்து அவசரமாக போகப்போனவனை தடுத்தான் ரமீஸ்…
“போகாதீங்க சேர் அது வேறமாதிரி கேஸ்…”
“வேறமாதிரிண்டா..?” புரியாமல் கேற்க…
“தூள் கேஸ் sir… அவங்களோட மூத்த மகன் 24 வயசு… நல்லா எடிக்ட்டாவிட்டான்
ஒரே காசு கேட்டு சண்டை புடிப்பான் கொடுக்காட்டி வீட்டு சாமான்களை உடைப்பான்…
ஒருமுறை விஷயம் தெரியாம நானும் எதோ சண்டைன்னு உதவப்போய் கைய கிழிச்சிட்டான் பரதேசி…” என கையில் ஒரு தழும்பைக் காட்டினான்…
எழுந்து அவசரமாகப் போனவன் வீட்டினுள் நுழைய…
அங்கே ஒரு தாய் உடைந்து அழுதுகொண்டிருந்தாள்… வெளியில் நின்றிருந்த தந்தை ரிடயர்ட் டீச்சர் ஊரில் நன்றாகத் அறியப்பட்டவர்…
கண்களை துடைத்துக்கொண்டவர் சுதாரித்துக்கொண்டு “வாங்க மேயர்” என எழுந்து நின்றார்…
திண்ணையில் உடைந்து கிடந்த பொருட்கள்… வெடித்திருந்த கதவு…
அவர்களின் கதையை விளங்கப்படுத்தியது….
“மானம் மரியாதை எல்லாம் போச்சு… இவக்கிட்ட எத்தனையோ தடவை சொல்லிட்டேன் இவனுக்கு ஏதாவது நஞ்சை குடுத்து கொல்லுன்னு… செய்ய மாட்டேங்குறா…” தேம்பித் தேம்பி அழுதார்…
“தம்பீ… பெத்த புள்ளைய எப்புடி கொல்லுறது…? எனக்கு என்ன செய்றதுண்டே தெரியுதில்ல… ஒவ்வொரு நாளும் நெருப்போடதான் விடியுது…”
நிலைமையை விளங்கிக்கொண்டவன்… ஏதோ முடிவுக்கு வந்தவனாக யாருக்கோ அழைப்பெடுத்தான்….
சிறிது நேரத்தின் பின் நான்கு வாட்டசாட்டமான இளைஞர்கள் ஒரு வாகனத்தில் வந்திறங்கினார்கள், இவரிடம் புன்னகைத்துவிட்டு வீட்டுக்குள் புகுந்தார்கள்…
“டேய் விடுங்கடா… ஒங்கள கொல்லாம விடமாட்டன்டா… ஆஆ…” என்ற சப்தங்களுடன்…
சிறிது நேரத்தில் அவனை தூக்கிக்கொண்டுபோய் வாகனத்தில் ஏற்றினார்கள்…
சிறிது நேரம் அந்த பெற்றோரோடு பேசிக்கொண்டிருந்தவன்…
“நான் ஒரு ஏற்பாடு செய்திருக்கிறேன்… இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரம் உங்கட மகன் டிரீட்மென்ட் எடுத்து திரும்பி வர துஆ செய்ங்க…”
என விலகினான்…
“தம்பீ நாங்க சரியா தூங்கி எத்துணையோ மாசம்… அல்லாஹ் ஒங்களுக்கு சொர்க்கத்தை தரணும்…”
நா தழுதழுக்க அவனுக்கு துஆ செய்தாள் அந்த தாய்…
###
மீண்டும் ரமீஸ் வீட்டில் பேசிக்கொண்டிருந்தார்கள்….
பிள்ளைகள் எல்லாரும் இப்போது எழுந்து வந்து எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்…
“ஒங்கள எங்களுக்கு தெரியுமே…” என்றாள் அந்த சின்ன மகள்…
“ஆ எப்படித்தெரியும்…?”
“கொஞ்சம் இருங்க…” என உள்ளே ஓடிப்போனவள் கையில் ஒரு அட்டையை கொண்டுவந்தாள்…
“இதுல இருக்கிறது நீங்க தானே…?” என்றாள்…
அது தேர்தல் கால ‘கம்பைனின்’ போது கொடுக்கப்பட்ட அட்டை அதிலே அவனது படம் இருந்தது…
புன்னகையோடு ஆம் என்றான்….
‘ளுகர்’ உடைய அதான் ஒலிக்க, இருவரும் பக்கத்தில் இருந்த மஸ்ஜிதுக்கு தொழுகைக்குச் சென்றார்கள்…
தொழுகை முடிந்ததும்…

“ரமீஸ் நீங்க ஒரு வேலை செய்ங்க… ஒரு மீட்டிங் நடாத்தனும்… வட்டாரத்துல கொஞ்சம் முக்கியமான ஆட்கள உங்கட வீட்டுக்கு வரச்சொல்லி இருக்கிறேன்… நீங்க போய் அவங்கள ரிஸீவ் பண்ணுங்க… நான் கொஞ்ச நேரம் கழிச்சு வாரன் என அனுப்பி வைத்தான்…

###
சிறிது நேரம் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்தான்…
இமாம் அவர்கள் பக்கத்தில் வந்து நிற்க எழுந்து கொண்டவன் ஸலாம் கூறிவிட்டு…
“எப்படி ஷேய்க்? சுகமாக..? இண்டைக்கு உங்கட வட்டார விசிட்…
எப்படி பள்ளி செயற்பாடுகள்…?
ஏதும் குறைகள் இருந்தா சொல்லுங்க முடிஞ்சா செய்து தரமுயற்சிக்கிறேன்…” என்றான்…
“அல்ஹம்துலில்லாஹ் நீங்க மேயரா வந்த பிறகு, நெறைய மாற்றம் சேர்… இந்த முறை நீங்க வந்தா ஒரு விஷயம் சொல்ல இருந்தேன்…”
“சொல்லுங்க” என முகம் மலர…
அவர் தொடர்ந்தார்… “‘பஜ்ருக்கு’ பொடியன்மார் பள்ளிக்கு வாரது ரொம்ப குறைவு சேர்… வட்டாரத்துட ஆன்மீக வளர்ச்சி, எதிர்காலம் எல்லாம் அவங்கதானே… வயதான சிலரைத்தான் எப்போதும் காண முடியுது… ஏதாவது புதுசா யோசிச்சா நல்லம்…”
” முக்கியமான விஷயம்… இதே பிரச்சினைக்கு நாங்க 2 ஆம் வட்டாரத்துல ஒரு வேலை செயரம்… நல்ல ரிசல்ட் கிடைக்குது… இங்கேயும் அத ப்ராக்டிஸ் பன்னி பார்க்கலாம்… ஒரு போட்டி நிகழ்ச்சி ஆரம்பிச்சிருக்கிறோம்… மாணவர்கள் பஜ்ர் தொழுகைக்கு ஜமாத்தோட தொழ வரணும் தொழுகை முடிஞ்சு தொழுவித்த இமாமிடம் அவர்களது log book ல கையொப்பம் எடுக்கணும்… 100 நாள் கையொப்பம் பெற்ற பிள்ளைகளுக்கு ஒரு ‘பைக்’ பரிசா கொடுக்குறோம்… நிறைய ஸ்டுடென்ட்ஸ் வாரங்க… இன்டரஸ்டிங் என்னண்டா.. பரிசை பெற்ற பிறகும் தொடர்ந்து அவங்க பள்ளிக்கு வாரங்க… அதுமட்டுமில்லாம இந்த ப்ராஜெக்ட் ஆல, அந்த பிள்ளைகளுக்கும் பள்ளி இமாமுக்கும் இடையில ஒரு நல்ல உறவும் வந்துவிடுகிறது…”
சொல்லி முடிக்க ஷேய்க் கண்கள் மின்ன அவனை ஆச்சரியமாகப் பார்த்தார்… “அல்ஹம்துலில்லாஹ்… நல்லதொரு முன்மாதிரி… ஆனால்… ‘பைக்’ ஏற்பாடுதான் இதுல இருக்கிற ஒரே சிக்கல்… ” என தயக்கத்துடன் கூறினார…
“அதைப்பற்றி நீங்க யோசிக்கவே தேவையில்லை… மாநகர சபைல ஒரு CSR fund ஏற்பாடு செய்திருக்கிறோம்… புத்தளத்தை நேசிக்கிற பல உறவுகள் இப்படியான பல ‘ப்ராஜெக்ட்’ க்காக நிதி வழங்க தயாராக இருக்கிறாங்க… பைக் ஏற்பாட்டை அதிலிருந்து நான் செய்து தாரேன்..”
“அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை தரணும் மேயர்…” உள்ளத்தில் உயிர் கசிய அவனை தழுவிக்கொண்டார் இமாம்…
“இன்ஷா அல்லாஹ், இந்த வாரமே ‘ப்ராஜெக்ட்டை’ வட்டாரத்துல அறிவிச்சு ஆரம்ப வேலைகளை செய்றேன்.. வார வெள்ளிக்கிழமை நிகழ்வை ‘லோஞ்ச்’ பண்ணுவோம் நீங்க கட்டாயம் வரணும்…”

“இன்ஷா அல்லாஹ்…” எனக் கூறி விடைபெற்றான்…

###
ரமீஸ் வீட்டில், சுமார் 15 பேரளவில் கூடியிருந்தார்கள்…
அவர்களிடம் கடந்த வட்டார ‘விசிட்’ வந்தபோது ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகள் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது…
திடீர் மரணம் நிகழ்ந்த குடும்பங்கள்… வட்டாரத்தில் இம்மாதம் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள்… கோயில் புனரமைப்பு…
புதிய கரப்பந்தாட்ட மைதானதின் இறுதிக்கட்ட வேலைகள் என பலதும் பேசப்பட்டன…
இறுதியாக எல்லோரும் வட்டாரத்தின் சில இடங்களை கால்நடையாகப் போய் பார்வையிட்டு, சில இடங்களை புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி விட்டு… மீண்டும் ரமீஸ் வீட்டுக்குத் திரும்பினார்கள்…
அனைவரையும் வாழ்த்தி வழியனுப்பினான்… அவர்களது பணிக்கு அடுத்த சந்ததி பிரார்த்திக்கும் என்றான்…!

ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேநீரை அருந்திவிட்டு, வந்தவர்கள் விடைபெற்றனர்…!

###
அங்கு நடைபெற்ற எல்லாவற்றையும் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த ரமீஸின் கடைக்குட்டி மகள்…
மெதுவாக எழுந்து அவனது பக்கத்தில் வந்தாள்…
“மாமா எனக்கும் ஒரு பிரச்சினை… இருக்கு… “
புன்னகைத்தவனாக… “ஓ அப்புடியா… என்ன பிரச்சினை..? சொல்லுங்க…” என்றதும்…
“எனக்கு தூங்க முடியல்ல… இந்த நெலும்பு ஒரே கடிக்குது… இத இல்லாமலாக்க மாட்டீங்களா…”
“ம்ம்ம்… அவங்கள அப்படி ஒடனே இல்லாமலாக்க ஏலாதுடா… ஆனா ஒன்னு செய்யலாம்…”
“என்ன செய்யலாம்…?”
“அது ஒங்கள கடிக்காம இருக்க ஒரு ஏற்பாடு செய்யலாம்…” என்றான்…
“அய்… என்னட ‘fரெண்ட்’ ரீமாக்கும் இதே பிரச்சினைதான்… அவக்கும் கடிக்காம இருக்க வைப்பீங்களா…?” என்றவளை தூக்கி உச்சி முகர்ந்து கொண்டான்…
தனது மோட்டார் ‘பைக்’இல் அவளை ஏற்றிக்கொண்டு புரப்பட்டவன்…
சிறிது நேரத்தில் கையில் சில ‘சொக்லேட்’ உடனும் இரண்டு நுளம்பு வலைகளுடனும் வந்து சேர்ந்தான்…
“ஏன் சேர் உங்களுக்கு இவ்வளவு பெரிய செலவு…” ரமீஸ் நெகிழ்ந்து போனான்…
“ரமீஸ் இது என்னுடைய காசு இல்லை… எல்லோருக்கும் வாங்கிக்கொடுக்கும் அளவு என்னிடம் பணமும் இல்லை…”
சில நல்ல நண்பர்களின் ஏற்பாடு இது… அவங்களுக்காக துஆ செய்துகொள்ளுங்க….”
“உங்கட சின்ன மகள்ட்ட நல்ல மனசு இருக்கு…
தனக்கு மட்டுமில்லாம நண்பிக்கும் சேர்த்து இந்த வயசுலேயே யோசிக்கிறா…
இன்ஷா அல்லாஹ் பெரிய சமூக சேவகியா வருவா… “

என்றவாறு விடைபெற்றான்…!

###
ரமீஸ் மெளனமாக நின்றிருந்தான்…!
அவர்கள் போவதையே பார்த்துக்கொண்டிருந்த சபீனாவின் கண்கள் கலங்கியிருந்தது…!
“எதோ பாவம் செய்ததுபோல் இருக்குதுப்பா…”
“ம்ம் எனக்கும் தான்..”
ஐந்து மாதங்களின் முன்
கடந்த மே-06 இல்…
அவருக்கு எதிராக வாக்களித்த நினைவுகள்…
முள்ளாய் குத்தியது…!!
—–
புத்தளம் மரிக்கார்

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...