கடலில் தள்ளப்பட்ட 38 ரோஹிங்யா அகதிகள்: சட்ட விதிமுறைகள் அனைத்தையும் மீறிய இந்திய காவல்துறையின் நடவடிக்கை

Date:

இந்திய அதிகாரிகள் அகதிகளை உயிருடன் கடலில் கை விடுகின்றார்கள்
போர் மற்றும் இனவாத கலவரங்களின் போது ஒருவரையொருவர் தாக்கும், கொல்லும் சம்பவங்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால், தமது சொந்த நாட்டிலுள்ள உயிராபத்து மிக்க கொடிய சூழ்நிலையிலிருந்து தப்பி தஞ்சம் கோரி வந்த பெண்கள், நோயாளிகள் மற்றும் சிறு குழந்தைகளளை சிறிதும் மனிதாபமில்லாமல் கடலுக்குள் தள்ளப்படுவதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தக் கட்டுரை அத்தகைய ஒரு கொடூரமான சம்பவத்தைப் பற்றியதாகும்.

மியான்மரில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களில் பலர், அவர்கள் அங்கு எதிர்கொள்ளும் இனவெறிக் கொடுமைகளைத் தாங்க முடியாமல், பங்களாதேஷ் இந்தோனேஷியா, இந்தியா போன்ற அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் சென்று வருகின்றனர் என்பதை நாம் அறிவோம்.

கடந்த 2025 மே 6 ஆம் திகதியன்று, இந்தியாவிற்கு தஞ்சம் கோரி வந்த பெண்கள், முதியவர்கள், சிறு பிள்ளைகள் மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட 38 ரோஹிங்யா அகதிகளை இந்திய அதிகாரிகள் ஒரு படகில் ஏற்றி மியான்மர் அருகேயுள்ள கடலில் பலவந்தமாக இறக்கி விட்டுள்ளனர்.

இந்த அகதிகள் அனைவரும் டெல்லி காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு பிறகு இந்தியாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டவர்களே ஆவர்.

பின்னர், அவர்களிடமிருந்து குடியியல் தரவுகளைப் பெறுவதற்கு என போலிக்காரணம் ஒன்றை கூறி அவர்களை அவர்கள் தங்கியிருந்த முகாம்களில் இருந்து பலவந்தமாக அழைத்துச் சென்று மேற்படி கொடூர விதிக்கு இந்திய அதிகாரிகள் ஆளாக்கியுள்ளனர்.

மேற்கண்ட மனிதாபிமானமற்ற மற்றும் அகதிகள் தொடர்பாக சர்வதேச சட்டவிதிகளுக்கு மாறான செயலுக்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றத்திலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவரின் சகோதரி இது பற்றிக் கூறுகையில்,

பிடி வாரண்டுகள், விசாரணைகள், முன் அறிவிப்புகள் போன்ற அகதிகள் தொடர்பான எந்த நடைமுறைகளும் இல்லாமல் தனது சகோதரனை பொலிஸார் அழைத்துச் சென்றதாகக் கூறுகின்றார்.

பின்னர் அவர்கள் நாடு கடத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் கடலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அழைத்துச் செல்லப்பட்ட மற்றொருவரின் உறவினர் இது பற்றி கூறுகையில்,

‘அவர்  ஒரு மிக நல்ல மனிதர். அவர் அகதிகளுக்காக இந்தியாவில் உள்ள ஐநா உயர்ஸ்தானிகர் அலுவலகம் வழங்கும் அகதிகள் அடையாள அட்டையையும் வைத்திருந்தார், ஒரு போதும் பொலிஸில் ஆஜராவதை அவர் தவறவிட்டதில்லை, அரசியலில் ஈடுபட்டதில்லை.

ஆனால் அவரும் பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்டார். அவர் மியன்மரை அடைந்ததிலிருந்து அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பது எனக்குத் தெரியவில்லை. இந்த நாடு சர்வதேசத்திற்கு எங்களைப் போன்றவர்கள் விடயத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிளையும் மீறுகின்றது’ எனக் கவலையுடன் கூறினார்.

ரோஹிங்யா அகதிகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும் சிரேஷ்ட வழக்கறிஞர் கொலின் கோன்சாலெஸ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் குழு, அதிகாரிகளின் நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பின் 22 வது பிரிவை மீறுவதாகக் எடுத்துக் கூறினர்.

இது பற்றி மேலும் விவரித்த வழக்கறிஞர்கள், அழைத்துச் செல்லப்பட்ட அகதிகளிடமிருந்து நிலையான நடைமுறையின்படி வாக்குமூலங்களைப் பெறவும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், அகதிகளை அழைத்துச் செல்ல வந்த சில காவல்துறை அதிகாரிகள் குடிபோதையில் இருந்ததாகவும், அழைத்துச் செல்லப்பட்டவர்களில் குறைமாத பிரசவத்தின் காரணமாக பலவீனமடைந்திருந்த ஒரு பெண்ணை அவர்கள் கெட்ட வார்த்தைகளால் ஏசியதாகவும் புகார் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, டெல்லியைச் சுற்றியுள்ள பல்வேறு காவல் நிலையங்களில், எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாமல் 40க்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகள் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான பால் மா மற்றும் குழந்தை உணவு
வழங்கப்படுவதில்லை என்பது மட்டுமல்லாமல், மிகவும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகள் எவ்வாறிருப்பினும் குறைந்த பட்சம் அவர்களுக்குத் தேவையான மருந்துகளும் வழங்கப்படுவதில்லை என்று வழக்கறிஞர்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும், அவர்களில் ஒரு அகதியை காவல்துறை அதிகாரிகள் கடுமையாக தாக்கியுமுள்ளனர். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் தலையிட்ட பின்னரே அவர் போலிஸ் பிடியிலிருந்து மீட்கப்பட்டார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தவிர, நாற்பது ரோஹிங்யா அகதிகள் அடங்கிய மற்றொரு குழு கண்கள், கைகள் கட்டப்பட்டு அந்தமான் தீவுகளுக்கு கொண்டு சென்று அங்கு விடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

ஏதேனும் நாட்டின் அகதிகளை நாடு கடத்துவதற்கு முன், இந்திய வெளிநாட்டினர் பதிவு அலுவலகம் நிலையான நடைமுறையின்படி நாடுகடத்தல் உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

அத்தகைய உத்தரவு இல்லாமல், எந்த அகதியையும் வலுக்கட்டாயமாக நாடு கடத்த முடியாது. நாடுகடத்தப்பட்ட ரோஹிங்யா அகதிகள் விடயத்தில் டெல்லி காவல்துறை அத்தகைய உத்தரவை பெற்றதை நிரூபிக்வில்லை என அகதிகளின் வழக்கறிஞர்கள் மேலும் கூறினர்.

இந்த விடயத்தை அகதிகளின் வழக்கறிஞர்கள் நீதிமன்றில் எழுப்பிய போது, இந்திய அரசின் பிரதம நீதியரசர் துஷார் மேத்தா, ரோஹிங்கியா அகதிகளை ‘அகதிகள்’ என இந்தியா ஏற்கவில்லை என்று கூறினார்.

அசாம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் இருந்து இந்தியா வந்த ரோஹிங்யா அகதிகளை நாடு கடத்துவதை நிறுத்துமாறு ஐ.நா. பரிந்துரை செய்த போது இந்திய அரசு அதை ஏற்காமையையும் அவர் இங்கு மேற்கோள் காட்டியுள்ளார்.

ஆனால், பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களுடன் அந்த ரோஹிங்கியா அகதிகளுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அப்போது இந்தியா அந்த நிலைப்பாட்டை எடுத்தது எனவும், மியான்மாரில் இருந்த உயிர் தப்பி வந்த அகதிகள் விடயத்தில் அந்த நிலைப்பாடு பொருந்தாது எனவும் அகதிகளின் வழக்கறிஞர் கோன்சலஸ் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.

வேறொரு நாட்டிலிருந்து தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வந்து தஞ்சம் கோரும் எவரையும் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்படக்கூடாது என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21 கூறுகின்றது.

மேலும், ஒரு அகதி நாடு கடத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டால், அவர் சார்ந்த நாட்டின் தூதரகத்தைத் தொடர்புகொண்டு, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்த அலுவலகத்துடன் சம்பாஷிப்பது கட்டாயமாகும்.

அவ்வாறு செய்யாமல் ஒரு தலைப்பட்சமாக போலிஸ் அதிகாரிகள் மேற்படி அகதிகளை கடலில் கைவிடுவது கற்காலத்தில் கூட நடந்திருக்க முடியாத மனிதாபிமானமற்ற செயலாகும்.

மே 8 ஆம் தேதி வங்காள விரிகுடாவில் உள்ள பிளேயர் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படட மேற்படி 38 அகதிகள் பிறகு அங்கு ஒரு படகில் ஏற்றப்பட்டு மியான்மருக்கு அருகில் கடலில் இறக்கிவிடப்பட்டுள்ளனர் எனக் கூறிய வழக்கறிஞர் கோன்சலஸ், இது ஒரு திட்டமிடப்பட்ட மனிதாபிமானமற்ற செயல் என்று சாடினார்.

படகில் இருந்த அகதிகளில் சிலரை அதிகாரிகள் தாக்கியுள்ளதுடன் அகதிகள் மத்தியில் இருந்த பெண்களை மோசமாகவும் நடத்தியுள்ளர். பெண் அகதிகள் இருந்த மேற்படி படகில் ஒரு பெண் அதிகாரி கூட இருக்கவில்லை எனவும் வழக்கறிஞர் கோன்சலஸ் சுட்டிக்காட்டினார்.

மியான்மரைச் சேர்ந்த அகதிகள் அகதி அந்தஸ்தைப் பெற தகுதியுடையவர்கள் என்பதை இந்திய அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என அரசு தரப்பினர் நீதிமன்றத்தில் வாதிட்ட போதிலும், ஐக்கிய நாடுகள் அமைப்பு இதை ஏற்று ஐ.நா. உயர் ஸ்தானிகர் அலுவலகம் இந்த அகதிகளுக்கு அடையாள அட்டைகளை கூட வழங்கியுள்ள நிலை இந்திய தரப்பின் வாதத்தை சவாலிற்கு உட்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா.வின் உறுப்பினர் என்ற வகையில் இந்திய அரசு ஐநா அமைப்பின் நிலைப்பாட்டை ஏற்கவும் அதன் பிரகாரம் செயல்படவும் கடமைப்பட்டுள்ளது என அகதிகளின் வழக்கறிஞர் குழு சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த அகதிகள் முஸ்லிம்கள் என்பதாலேயே அவர்கள் இவ்வாறு இறக்கமின்றி நாடு கடத்தப்படுகிறார்கள் என்பதையும் அவர்கள் நீதிமன்றத்தில் எடுத்துரைத்துள்ளனர்.

படகில் ஏற்றப்பட்ட அகதிகளை மியான்மார் அருகில் கொண்டு சென்று பாதுகாப்பு அங்கிகளை கொடுத்து கடலில் இறக்கி விடப்பட்டவுடன் சிறார்கள், பெண்கள் மற்றும் வயோதிபர்கள் உட்பட்ட அந்த அப்பாவிகள் சுமார் 12 மணி நேரம் மிதந்தவாறும் இயன்ற விதத்தில் கால்களை அடித்து நீந்தியவாறும், அவர்களுக்கு சொல்லொனா துன்பங்களை தரக்காத்திருக்கும் மியன்மார் கரையை மீண்டும் சென்றடைந்துள்ளனர்.

1951 அகதிகள் உடன்படிக்கை அல்லது 1967 அகதிகள் நெறிமுறையில் இந்தியா கையெழுத்திடாததால், ரோஹிங்யாக்கள் அடிப்படையில் ‘உரிமைகள் இல்லாத வெளிநாட்டினர்’ என்று அரச தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.

அது உண்மைதான் என்ற போதிலும், சித்திரவதை மற்றும் ஏனைய கொடூரமான, மனிதாபிமானமற்ற செயல்கள் அல்லது அவமதிப்பு மற்றும் துன்புறுத்தலுக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதால், அதன் பிரிவு 3 இன்படி அடைக்கலம் தேடி வரும் அகதிகளை, அவர்களுடைய சொந்த நாட்டிலேயே இதுபோன்ற நிலைமைகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதால், வலுக்கட்டாயமாக அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப முடியாது என அகதிகளின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, இந்தியாவில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் அலுவலகம் மேற்படி 38 அகதிகளின் நிலை குறித்த தகவல்களை தமது அலுவலகத்திடகு தெரிவிக்குமாறு மியான்மர் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது ஒரு திருடனின் தாயாரிடம் திருடன் பற்றி குறி கேட்பது போன்றதே அன்றி வேறில்லை. அதற்கு பதிலளித்த மியன்மார் அரசு, மேற்படி அகதிகள் பற்றி விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும், அந்த அகதிகள் பற்றிய எந்த தகவலும் இது வரை கிடைக்கவில்லை என்பதோடு அவர்கள் இந்தியாவில் தம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்களைத் தொடர்பு கொள்ளவுமில்லை.

இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சிடம் அகதிகளின் வழக்கறிஞர்கள் விசாரித்தபோது இது தற்போது உயர் நீதிமன்றத் தீர்ப்புடன் தொடர்புடைய ஒரு சரச்சைக்குறிய விடயம் என்பதால், அது பற்றிய தகவல்களை வெளியிடவோ அல்லது இது தொடர்பான உததியோகபூர்வ கருத்துக்களை தெரிவிக்கவோ முடியாது என அமைச்சக அதிகாரிகள் தெரிவித்ள்ளனர்.

Article source: thewire.in

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...