பயங்கரவாதத்துடன் தொடர்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்தல் காரணமாக தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களின் புதிய பட்டியல் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் கீழ் தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற எயார்வைஸ் மார்க்ஷல் சம்பத் தூயகொந்தாவால் மே 30 ஆம் திகதி இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
2438/47 இலக்க வர்த்தமானி அறிவித்தலின் படி புதிதாகத் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலில் 15 அமைப்புக்களும்; 217 தனிநபர்களும் தடை செய்யப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட அமைப்புக்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட தேசிய தௌஹீத் ஜமாஅத், ஜமாஅதே மில்லத் இப்ராஹீம், விலாயத் அஸ்ஸைலானி, தாருல் அதர் அத்தபவிய்யா, இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம், ஸேவ் த பேள்ஸ் ஆகிய அமைப்புக்கள் தடை செய்யப்பட்டவையாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன.
தடைசெய்யப்பட்ட தனிநபர்களின் பட்டியலும் இந்த வர்த்தமானியில் திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் 93 இலங்கை முஸ்லிம்களும், அஹமட் தாலிப் லுக்மான் தாலிப், அஹமட் லுக்மான் தாலிப் ஆகிய இரண்டு அவுஸ்திரேலியப் பிரஜைகளும், 07 மாலைதீவுப் பிரஜைகளும், 2 துருக்கிய பிரஜைகளும், 01 ஆப்கானியப் பிரஜையும் அடங்குகின்றனர்.
தடை செய்யப்பட்ட அமைப்புக்களினதும் தனிநபர்களினதும் நிதி, நிதி ரீதியான சொத்துக்கள், பொருளாதார வளங்கள் அனைத்தும் தொடர்ந்தும் முடக்கப்படுவதாகவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.