ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் மீது, அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், நேற்று (02) இரவு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமைதானத்துக்கு அருகில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த மப்றூக் மீதுஇ அங்கு வந்த சிலர் திடீரென தாக்குதல் நடத்தியதாக அக்கரைப்பற்று பொலிஸ் அதிகாரி ‘நியூஸ்நவ்’விடம் தெரிவித்தார்.
தாக்குதலுக்கான காரணமாக, பிரதேச சபை உறுப்பினரைப் பற்றி சமூக ஊடகங்களில் தவறான கருத்துகள் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஏற்பட்ட கோபமே இந்த தாக்குதலுக்கு வழிவகுத்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், தாக்குதலுடன் நேரடியாக தொடர்புடையவர் ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் என்றும், அவருடன் வந்தவர்கள் மது அருந்தியிருந்ததாகவும் ஊடகவியலாளர் மப்றூக் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் தன்னைப்பற்றி சமூக ஊடங்களில் அவதூறு பரப்பியிருந்தார் என பிரதேச சபை உறுப்பினரும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மப்றூக்குக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பான விசாரணைகள் 314வது பிரிவின் கீழ் இரு தரப்பினரிடமும் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம் தெரிவித்துள்ளது
இந்த தாக்குதல் ஊடகவியலாளர்களின் ஊடகப் பணிக்கு விடுக்கும் நேரடி அச்சுறுத்தலாகும். அத்துடன் ஊடக சுதந்திரத்தினையும் கேள்விக்குறியாக்கின்றது.
ஊடகவியலாளர் மப்றூக் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏனைய ஊடகவியலாளர்கள் மீது இடம்பெறாததை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டியுள்ளது.
இந்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடைய அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு உரிய நீதி கிடைக்க தேவையான நடவடிக்கைகளை பதில் பொலிஸ் மா அதிபர் முன்னெடுக்க வேண்டும் எனவும் முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை விடுத்துள்ளது.