அமெரிக்க நன்கொடையாளர்களிடமிருந்து குறிப்பிட்ட அளவு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை இலங்கைக்கு வழங்க இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஒப்புக்கொண்டுள்ளார்.
இலங்கையின் சுகாதாரத்துறை முன்னேற்றம் மற்றும் ஊடக துறையின் மேம்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று வியாழக்கிழமை (10) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி ஜே. சங் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்குவதற்கான திட்டம் அமெரிக்க நன்கொடையாளர்களின் மூலமாக முன்னெடுக்கப்படும் என அமெரிக்க தூதர் உறுதியளித்தார்.
அதேநேரம், அரசாங்க மருத்துவமனைகளில் ஏற்படும் மருந்துகளின் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கான விசேடத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் மூலம் நாட்டிற்கு அத்தியாவசிய மருந்துகளைப் பெறுவதற்கு விசேடத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.
அத்துடன், டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் தொடர்பான குறுகிய கால, நீண்டகாலத் திட்டங்கள் மற்றும் அவற்றை செயல்படுத்தும் முறை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.