வரலாற்றின் துயரமிகு வடுக்கள்: ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையின் 30வது ஆண்டு நினைவு தினம் இன்று!

Date:

இன்று, ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையின் 30வது ஆண்டு நினைவு தினம். இந்தப் படுகொலை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்த மிக மோசமான படுகொலையாகும்.

போஸ்னியாவில் கொடூரமான ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையின் 30 வது ஆண்டு நினைவு தினத்தினை ஜூலை 11 அன்று அனுசரிக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று இனப்படுகொலையை நினைவு கூறும் வண்ணம் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி நினைவு கூர்வது வழக்கம். இந்த ஆண்டு 30 வது ஆண்டு என்பதால் இந்த நினைவு தினத்தினை மிகப் பெரிய அளவில் அனுசரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

படுகொலையானவர்களின் ஸ்ரெப்ரெனிகா நினைவகம் (Srebrenica Memorial), அதிகாரப்பூர்வமாக “பொட்டோச்சாரி ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலை நினைவு மைய கல்லறை” (Memorijalni centar Srebrenica-Potočari) அங்கே பொது மக்களால் அமைக்கப்பட்டுள்ளது.
பால்கன் (Balkan States) தேசங்களில் தீவிரமான போர் காலங்களில் இந்த கொடூரமான படுகொலை நிகழ்ந்தது. 1995 ஜூலையில் ஸ்ரெப்ரெனிகாவில் ஒரு வாரத்துக்குள் விசாரணை என்ற போர்வையில் அழைத்துச் சென்ற மொத்தம் எண்ணாயிரத்திற்கும் அதிகமான போஸ்னிய முஸ்லிம் ஆண்கள் மற்றும் சிறார்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள்.
சேர்பியப் படைகள் 12 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை தனியே பிடித்து வைத்திருந்து இப்படுகொலைகளை மேற்கொண்டிருந்தது. இது இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு பின்பு ஐரோப்பிய நிலப்பரப்பில் நிகழ்ந்த மிகப்பெரிய இனப்படுகொலையாக சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது
இதுவரையில் என்பதுக்கும் மேற்பட்ட மனித புதைகுழிகளிலிருந்து 6900 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. போஸ்னிய இஸ்லாமியர்கள் மற்றும் குரோசிய இன மக்களுக்கு எதிராக சேர்பியாகளின் படை நடத்திய தாக்குதல்களில் 1992 க்கும் 1995 க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டார்கள். இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்பான காலத்தில் நடந்த மிகப்பெரிய படுகொலையாக பார்க்கப்படுகிறது.

போஸ்னியர்கள் யார்?

போஸ்னியர்கள் தெற்கு ஸ்லாவிக் முஸ்லிம்கள், முதன்மையாக போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவைச் சேர்ந்தவர்கள். 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது அவர்கள் யூகோஸ்லாவியாவில் “முஸ்லிம்கள்” என்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டனர், ஆனால் பலர் இப்போது போஸ்னியர்கள் என்று அடையாளம் காணப்படுகிறார்கள், இந்த வரலாற்றுச் சொல் போரின் போது மீட்டெடுக்கப்படுகிறது.

இன்று, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் மூன்று முக்கிய இனக்குழுக்களில் போஸ்னியர்களும் ஒருவர், நாட்டின் சுதந்திரப் பிரகடனத்தைத் தொடர்ந்து ஒரு பேரழிவு தரும் போரில் சிக்கிக் கொள்கிறார்கள்.

அவர்களின் அடையாளம் போஸ்னியாவுடனான பல நூற்றாண்டுகளின் கலாச்சார மற்றும் வரலாற்று தொடர்பில் வேரூன்றியுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு யூகோஸ்லாவியக் குடியரசின் சோசலிச கூட்டமைப்பு (Socialist Federal Republic of Yugoslavia) என்பது 6 குடியரசுகளை உள்ளடக்கியதாக இருந்தது. அவை போஸ்னியா-ஹெர்சேகோவினா, குரோசியா, மாசிடோனியா, மாண்டிநீக்ரோ, சேர்பியா மற்றும் ஸ்லோவேனியா ஆகும்.
யூகோஸ்லாவியாவின் அதிபரும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான மார்ஷல் டிட்டோ(Josip Broz Tito) 1980இல் இறந்த பிறகு அங்கு அரசியல் சிக்கல்கள், குழப்பங்கள் உருவாக ஆரம்பித்தன. இதனால் அடுத்து வந்த பத்தாண்டுகளில் 1991-ம் ஆண்டு யுகோஸ்லாவிய கூட்டமைப்பு பல்வேறு சிக்கல்களின் காரணமாக உடைவுறத் தொடங்கியது.
இதன் பின்னர் போஸ்னியாவின் விடுதலை அறிவிப்பை ஏற்காத போஸ்னிய சேர்பியாகள், 1992-ம் ஆண்டு போஸ்னியா-ஹெர்சேகோவினா குடியரசானது யுகோஸ்லாவிலிருந்து தனது விடுதலையினை அறிவித்தது. போஸ்னியா-ஹெர்சேகோவினா குடியரசில் போஸ்னிய இஸ்லாமியர்கள், போஸ்னிய சேர்பியாகள், குரோசியர்கள் எனும் மூன்று இனங்களைச் சேர்ந்த மக்கள் வசித்தார்கள்.
அவர்களின் மக்கள் தொகையில் 44 சதவீதம் போஸ்னிய இஸ்லாமியர்களும், 31 சதவீதம் சேர்பியர்களும், 17 சதவீதம் குரோசியர்களும் இருந்தனர். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக இருந்ததாலும், இஸ்லாமிய கட்சி ஆட்சியில் இருந்ததாலும், அங்கு வசித்த சேர்பியர்கள் இந்த விடுதலை அறிவிப்பினை ஏற்கவில்லை.
அவர்கள் யூகோஸ்லாவியாவுடன் சேர்ந்திருக்கவோ அல்லது சேர்பியாவுடன் இணைந்து கொள்ளவோ விரும்பினார்கள். அப்போது அங்கு வளர்ந்திருந்த இனவாத சக்திகள் போஸ்னியாவின் சேர்பிய மக்களை, போஸ்னிய இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், குரோசியர்களுக்கு எதிராகவும் தூண்டிவிட்டன.
போஸ்னியாவின் சேர்பிய கட்சியின் தலைவர் ரேடோவான் கராட்சிக் என்பவர் சேர்பியர்களுக்கான தனி ’சேர்பிய தேசிய அவையை (Serbian National Assembly)உருவாக்கினார். சேர்பியர்களின் படையும் தனியே உருவாக்கப்பட்டஉ இருந்தது. அதேவேளை 1992 மே மாதம் ஐக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய யூனியனும் போஸ்னியாவின் விடுதலையை அங்கீகரித்தன.
இதன் பின்னர் போஸ்னியாவில் இருந்த சேர்பியர்களின் படை, யூகோஸ்லாவிய ராணுவத்துடன் சேர்ந்து கொண்டு போஸ்னியாவின் தலைநகரத்தை தாக்கியது.
கிழக்கு போஸ்னியாவில் இருந்த இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளையும் தாக்கினார்கள். போஸ்னியாவின் பல பகுதிகளை சேர்பியர்களின் படை கைப்பற்றியது.
இதற்கிடையில் இஸ்லாமியர்கள் மிகப் பெரிய அளவில் படுகொலை செய்யப்பட்டார்கள். சொத்துகள் சூறையாடப்பட்டன. அரசியல் தலைவர்களும், அறிவுஜீவிகளும் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். ஏராளமான குரோசியர்களும், போஸ்னிய இஸ்லாமியர்களும் நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள்.

1995ம் ஆண்டு ஸ்ரெப்ரெனிகா, செபா, கொராஸ்டெ ஆகிய மூன்று நகரங்கள் போஸ்னிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. இப்பகுதியில் அகதிகள் ஏராளம் இருந்ததால் இதனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, ஐ.நாவின் அமைதிகாப்புப் படை அங்கிருந்தது. அங்கு 50,000 பொதுமக்கள் அகதிகளாக இருந்தார்கள்.

ஜூலை 11, 1995 அன்று ராட்கோ மிளாடிக் எனும் தளபதியின் உத்தரவுப்படி சேர்பியாகளின் படை ஸ்ரெப்ரெனிகா பகுதிக்குள் நுழைந்தது. போஸ்னிய இஸ்லாமியர்களை படுகொலை செய்யத் தொடங்கியது. சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரும் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டனர். பெண்கள் பலர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
ஏராளமான போஸ்னிய இளைஞர்களை அவர்களின் மரணத்திற்கு முன்பு அவர்களையே குழிவெட்ட சொல்லி, அக்குழியில் அவர்களை சுட்டுத் தள்ளியது சேர்பியாகளின் படை. இந்நிகழ்வில் 8000 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டு வார கால இடைவெளிக்குள் இந்த படுகொலைகள் நடைபெற்றன.
கோரமான ஸ்ரெப்ரெனிகா படுகொலையானது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்தின் இயலாமையை அப்பட்டமாக வெளிக்காட்டியது. போரின்போது ‘பாதுகாப்பான பகுதி’ என அறிவிக்கப்பட்ட ஒரு பிராந்தியத்தில், ஐ.நா. அமைதிப்படையினரின் பிரசன்னத்தையும் மீறி சேர்பியப் படைகளால் இந்த இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது. இக்கொடூரச் செயல் உலக அளவில் பேரதிர்ச்சியையும் கடும் கண்டனங்களையும் ஏற்படுத்தியது.

இந்த இனப்படுகொலையின் போது, பெண்களும் குழந்தைகளும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தனர். பெண்கள் மற்றும் சிறுமிகள், சேர்பியப் படையினரால் பாலியல் வன்கொடுமைகளுக்கும் கொடிய சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர் என்பதற்கும் வலுவான சாட்சியங்கள் உள்ளன.

கொடூரமான இந்தப் இனப்படுகொலை ஏற்படுத்திய உளவியல் வடுக்கள், பல பெண்களின் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றிவிட்டன. ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் கணவர்களையும் மகன்களையும் இழந்து விதவைகள் ஆனார்கள்.
அத்துடன் அவர்களின் குழந்தைகள் தந்தையற்றோராய் நின்றனர். இத்தகைய துயர நிலையிலும் துவண்டுவிடாமல், இந்தப் பெண்கள் நீதிக்காக நடத்திய போராட்டம், உலகிற்கே ஓர் உதாரணமாகத் திகழ்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...