இதுவரை உலகம் முழுக்க 47 வகை இரத்தப்பிரிவுகள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.
அவற்றில் ஏ, பி, ஏபி, ஓ எனும் நான்கு வகைகள் மிக முக்கியமானவை. முதன் முதலில் ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கார்ல் லான்ஸ்டீனர் (Karl Landsteiner) எனும் விஞ்ஞானி 1901-ல் இரத்த வகைகளைக் கண்டுபிடித்தார். அதற்காக அவருக்கு 1930ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு பெப்ரவரி, கோலாரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் 38 வயதான பெண்மணி ஒருவர். அவருடைய இரத்த வகை O+ பாசிட்டிவ்.
அறுவை சிகிச்சைக்கு முன் இரத்த வங்கியில் இருந்து அவருக்கு இணக்கமான இரத்த வகையை பொருத்திப்பார்த்தபோது, அதில் ஒன்றில்கூட பொருந்தக் கூடிய யூனிட்டை கண்டுபிடிக்க முடியவில்லை.
உடனே, அவருடைய குழந்தைகளில் ஆரம்பித்து குடும்ப உறுப்பினர்கள் வரை சுமார் 20 பேர்களின் இரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதித்த பார்த்தபோது, அவர்களுடைய இரத்தமும் ஒத்துபோகவில்லை.
ஆனால், அதிர்ஷ்டவசமாக இரத்தம் ஏற்ற வேண்டிய தேவையிராமல், அந்தப் பெண்மணிக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருக்கிறது.
இதைத்தொடர்ந்து, அந்தப் பெண்மணிக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை இந்தப் பெண்ணின் இரத்தத்தை லண்டனில் உள்ள சர்வதேச இரத்தக் குழு குறிப்பு ஆய்வகத்துக்கு (International Blood Group Reference Laboratory (IBGRL) அனுப்பி வைத்திருக்கிறது.
அங்கு 10 மாத கால விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு, இந்த இரத்தத்தில் இருப்பது புதிய வகை ஆன்டிஜென் குரோமர் என தெரிவித்துள்ளது.
இந்த இரத்தவகைக்கு அதிகாரப்பூர்வமாக ‘CRIB’ என்று பெயரிடப்பட்டுள்ளது, CR குரோமரைக் குறிக்கிறது. IB இந்தியா மற்றும் பெங்களூருவைக் குறிக்கிறது.
ஏற்கனவே இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘பாம்பே ரத்த வகை’ (Bombay blood group) உலகளவில் அரிதான ரத்த வகையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை போன்று தற்போது பெங்களுருவில் கண்டறியப்பட்டுள்ள ‘CRIB’ இரத்த வகை ஆராய்ச்சியாளர்களை இந்தியா பக்கம் திரும்பி பார்க்கவைத்துள்ளது.