புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் பொதுச்சபை கூட்டம் இம்மாதம் 7ஆம் திகதி புத்தளம் தில்லையடியில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
புத்தளம் மாவட்டத்தில் காணப்படும் சகவாழ்வை பாதிக்கும் விவகாரங்கள் தொடர்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடலாக இது அமைந்திருந்தது.
மாவட்ட சர்வமத குழுவின் தலைவர்களான பொலன்னருவே சீலானந்த தேரர், முரளீதரன் சர்மா குருக்கள், அருட் தந்தை திலங்க பெரேரா அஷ்ஷெய்க் எம்.எஸ் அப்துல் முஜீப் ஆகியோர் தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.
ஒரு நாள் நிகழ்வாக நடைபெற்ற இந்நிகழ்வின் ஒரு பகுதியாக அண்மையில் இடம்பெற்ற உள்ளுராட்சிச் தேர்தலில் வெற்றி பெற்று புத்தளம் மாநகர சபையின் முதலாவது மேயர் என்ற பெயருடன் வெற்றிவாகை சூடியுள்ள பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் அவர்களுடான கலந்துரையாடலும் நடைபெற்றது.
மேற்படி நிகழ்விலேயே மேயர் ரின்சாத் கருத்துத் தெரிவித்தார்.
நமது நாட்டில் சகவாழ்வை கட்டியெழுப்புவதில் சர்வமத அமைப்புக்களின் பங்கு மகத்தானது என்பதை சிலாகித்துக் கூறிய அவர், இன்று ஏற்பட்டுள்ள நல்ல மாற்றத்தின் விளைவாகவே அவரைப்போன்ற புத்திஜீவிகள் பலர் பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்கு வரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.
அத்தோடு பிரதேசத்தில் தொடர்ந்து சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் வகையில் தனது பதவிக்காலத்தில் முடியுமான பங்களிப்பை செய்வதோடு அதற்கு அப்பாலும் அரசுடன் இணைந்து செய்யவேண்டிய வேலைகளிலும் தனது முழுமையான பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அவர்களை கெளரவிக்கும் வகையில், சர்வ மதத் தலைவர்களால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பு கடந்த பல வருடங்களாக புத்தளம் மாவட்டத்தில் சகவாழ்வையும் இன நல்லிணக்கதையும் ஏற்படுத்தும் வகையில் பலவிதமான பணிகளில் ஈடுபட்டு வருவது சகலரும் தெரிந்ததே.
அந்த வகையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் புத்தளம் மாவட்டத்தில் மொழி ரீதியிலான தடைகளை களைவது உட்பட பல்வேறு தடைகள் சம்பந்தமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதோடு அதனை நிவர்த்திக்கும் வகையில் முக்கியமான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளும் முன்மொழியப்பட்டன.
இக்கூட்டத்தின் இறுதியில் இலங்கை குடும்பச் சங்கத்தின் புத்தளம் மாவட்ட பிரதிநிதி சமித் ஜயசூரிய கலந்துகொண்டு இலங்கை குடும்ப சங்கம், தாய்மார்,இளம் பெண்கள்,கர்ப்பிணிகள், திருமணம் முடிக்கவுள்ளோர் மத்தியில் மேற்கொண்டு வருகின்ற காத்திரமான பணிகள் குறித்து விளக்கமளித்தார்.
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் சிறப்பாக நடந்த இந்த ஒன்றுகூடல், மதத்தலைவர்களின் ஆசிர்வாதத்தோடும் மாவட்ட சர்வமதக்குழுவின் இணைப்பாளர் திருமதி முஸ்னியாவின் நன்றியுரையுடனும் நிறைவுபெற்றது.