பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான, ஆற்றல்மிக்க, முற்போக்கான, சகிப்புத்தன்மை மற்றும் ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தானின் சுதந்திரத்தின் 79 வது ஆண்டு விழாவை கொண்டாடியது.
கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய வளாகத்தில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு தொடர்பில் இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ,
இவ்வாண்டு நிகழ்வானது, இந்தியாவின் வெளிப்படையான ஆக்கிரமிப்பு மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் ஆயுதப் படைகள் நடத்திய வெற்றிகரமான ஆபரேஷன் பன்யான் அன் மர்சூஸைத் தொடர்ந்து இது நடைபெறுவது சிறப்பம்சமாகும்.
இந்த வெற்றிகரமான நடவடிக்கை, நமது தேசிய பாதுகாப்புக்கு எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும் இன்னும் வலுவான, கடுமையான மற்றும் தீர்க்கமான பதிலடியுடன் எதிர்கொள்ளப்படும் என்பதற்கு தெளிவான சான்றாக அமைந்தது.
இது நமது ஆயுதப் படைகளின் தயார்நிலை மற்றும் தொழில்முறைத்தன்மையையும், தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்துகிறது.
மேலும், இப்பகுதியில் தண்ணீரை ஆயுதமாகப் பயன்படுத்துவது ஒருபோதும் பொறுத்துக்கொள்ளப்படமாட்டாது. மேலும், அனைத்து மன்றங்களிலும் பதிலடி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) பாஹீம் உல் அஸீஸ் அவர்கள் பாகிஸ்தான் தேசிய கீதம் இசைக்கப்படும் வேளையில் பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஏற்றி இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் விசேட செய்திகள் வாசிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) பாஹீம் உல் அஸீஸ் அவர்கள் இந்நாளின் சிறப்பினை குறிப்பிட்டதோடு இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையில், நமது இராஜதந்திர பாதுகாப்பு மற்றும் கலாச்சார உறவுகளை தொடர்ந்து வளர்த்து வரும் அதே வேளையில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்குள் வர்த்தகம் மற்றும் இருதரப்பு முதலீட்டை மேம்படுத்துவதன் மூலம், இரு நாடுகளுக்கு இடையே பொருளாதார இணைப்புகளை விரிவுபடுத்தவும் வழிகளை ஆராய்ந்து வருகிறோம்” என்று குறிப்பிட்டார்.
இராஜதந்திர உறுப்பினர்கள், பாகிஸ்தான் சமூகத்தினர், உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர், உள்ளூர் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.