இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அபாயங்களை குறைக்கும் நோக்கில் தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் (National Cyber Security Operations Centre) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையம், இலங்கை கணணி அவசரப் பதிலளிப்பு நிறுவனம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் மூலம் இணையவழித் தாக்குதல்கள் மற்றும் அனுமதியின்றிய நுழைவுகளை அடையாளங் காண முடியும் எனவும், அரச நிறுவனங்கள் வழங்கும் அத்தியாவசிய சேவைகள், தனிப்பட்ட தரவுகள், தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இணையவழித் தாக்குதல்கள் மற்றும் குற்றச்செயல்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து, அரச நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.