கல்வித்துறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் மறு சீரமைப்பு பற்றி தற்போது அரசாங்கம் பல மட்டங்களிலும் பல முயற்சிகளை செய்து வருகிறது.
இது தொடர்பாக பல்கலைக்கழக மற்றும் பல்வேறு துறை சார்ந்த கல்வியாளர்கள் பல வகையான கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் சூழலில் இது பற்றிய தெளிவு ஒன்றை பெற்றுக் கொள்ளும் நோக்கோடும் முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நோக்கோடும் தேசிய ஷூரா சபை இது தொடர்பான ஆரம்ப கட்ட முயற்சியாக ஒரு ஆலோசனை பட்டறையை நடத்தியது.
கடந்த சனிக்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை கொழும்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், மற்றும் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட கல்வித்துறையோடு சம்பந்தப்பட்ட பலரும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்நிகழ்வு ஏக காலத்தில் நேரடியாக சமூகம் தராதவர்களுக்காக நிகழ்நிலை மூலமாகவும் நடைபெற்றது.
தற்போதைய கல்வி மறு சீரமைப்புக்கான திட்ட வரைவு எப்படி இருக்கிறது? அதன் இலக்குகள் யாவை? அவற்றின் உள்ளடக்கங்கள் யாவை? என்பது பற்றிய ஓர் உரையும் அதனைத் தொடர்ந்து அதற்குள் இருக்கும் சாதகமான பாதகமான விடயங்கள் பற்றிய உரையும் இடம் பெற்றன.
நிகழ்வில் முக்கிய ஓர் அங்கமாக வந்திருந்த குழுக்கள் 4 பிரிவினராக வகைப்படுத்தப்பட்டு தமது கருத்துக்களை கலந்துரையாடல் வடிவத்தில் முன்வைத்தனர்.
இறுதியில் 13 பேர் கொண்ட ஒரு விஷேட நிபுணத்துக் குழு இத்துறை தொடர்பாக மேலும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளையும் நாட்டின் தேவைகளையும் உள்ளடக்கிய வகையில் ஒரு அறிக்கையை தயாரிப்பதற்குமாக நியமிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக தமது கருத்துக்களை முன்வைக்க இருப்பவர்கள் தேசிய சூரா சபையின் உத்தியோகபூர்வ மின்னஞ்சலுக்கும் nationalshooracouncil@gmail.com
அதேபோன்று உத்தியோகபூர்வ கைத்தொலை பேசி இலக்கத்துக்கும் 0766270470
தமது கருத்துக்களை அனுப்பிவைக்க முடியும்.