தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவிக்கையில் ”மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது பெரும்பாலும் சாத்தியமில்லை.
அவருக்கு மேலும் ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதால், சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாது” இருப்பினும், சூம் (Zoom) தொழில்நுட்பம் மூலம் ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வந்தால், அது தொடர்பாகத் தேவையான வசதிகளை வழங்கச் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும்” இவ்வாறு ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
சம்பவம் தொடர்பாக கடந்த 22 ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியை இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அன்றைய தினம் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மருத்துவ பரிந்துரையின் பேரில், மறுநாள் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.