இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட தரப்பினரை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில், கெஹெல்பத்தர பத்மே, கொமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துறை நிலங்க ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலும், பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவிலும் இவ்வாறு தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி பெற்றுள்ளனர்.
இந்தேனேசியாவில் கைதான இவர்கள் கடந்த சனிக்கிழமை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது கொலை வழக்குகள், போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் மற்றும் பயமுறுத்தி பணம் பறித்தல் தொடர்பாக விசாரிக்கப்பட உள்ளன. கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன், பாணதுரே நிலங்க மற்றும் தெம்லி லஹிரு ஆகியோர் நேற்று முன்தினமிரவு சுமார் 07:25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்கள் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து விசேட பாதுகாப்பின் கீழ், நாட்டுக்கு வந்தனர். அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டபோது வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்தக் குழு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப். வுட்லர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் குற்றப் புலனாய்வுப்பிரிவின் உயர் அதிகாரிகள் குழுவும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தது .
நாட்டில், கடந்த 2 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை இவர்கள் திட்டமிட்ட விதங்கள் மற்றும் இவற்றுக்குப் பின்னாலிருந்த அரசியல் தலையீடுகள் குறித்தும் விசாரிக்கப்படவுள்ளன.