இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்த ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, இஸ்ரேலின் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்தார்.
கத்தாரின் இறையாண்மையை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்குப் பிராந்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதையும் அவர் வரவேற்றிருக்கிறார்.
“இந்த காட்டுமிராண்டித்தனமான இஸ்ரேலிய தாக்குதலைக் கண்டித்த சகோதர அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கும், சர்வதேச சமூகத்தின் நட்பு நாடுகளுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன” என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அதேபோல பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தார், “இந்த மாநாடு ஒரு தெளிவான செயல் திட்டத்தை எட்ட வேண்டும். அணுசக்தி கொண்ட பாகிஸ்தான் தனது கடமையை செய்யும்” என்று கூறியிருக்கிறார்.
இந்த மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானம் குறித்து இன்று அல்லது நாளை அறிக்கை வெளியாகலாம்.
பலஸ்தீனத்தின் காசா, மேற்கு கரை, லெபனான், சிரியா, ஈரான், இராக், துனிஷா, ஏமன், கத்தார் என 8 நாடுகள் மீது இஸ்ரேல் இதுவரை தாக்குதல் நடத்தியிருக்கிறது.
ஹமாஸை அழிக்கிறோம் என்று சொல்லிதான் பலஸ்தீனம் மீது தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. ஆனால் இந்த நோக்கம் இதுவரை நிறைவேறவில்லை. மாறாக, 63,000க்கும் அதிகமான பொதுமக்களை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்திருக்கிறது. ஐநாவும் அமெரிக்காவும் கூட இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துவிட்டன. ஆனால் இஸ்ரேல் அடங்கவில்லை.
மறுபுறம் கத்தார் மீது நடந்த தாக்குதல் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா முன்வைத்த ஆலோசனைகள் குறித்து விவாதிக்க ஹாமஸ் தலைவர்களை கத்தார் அழைத்திருந்தது.
அழைப்பின் பேரில் கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்கள் செப்.19ம் தேதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போதுதான் இஸ்ரேல் 10 போர் விமானங்களை கொண்டு பேச்சுவார்த்தை நடந்த கட்டிடம் மீது தாக்குதலை நடத்தியிருக்கிறது.
இதில் ஹமாஸ் தலைவர் உயிர் பிழைத்துவிட்டார். இருப்பினும், அவருடன் வந்தவர்களும், கத்தார் பாதுகாப்பு படையை சேர்ந்தவரும் கொல்லப்பட்டனர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கத்தாரில் அமெரிக்காவின் இராணுவ தளம் அமைந்திருக்கிறது. கத்தார் மீது மூன்றாம் நாடுகள் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா தடுக்க வேண்டும் என்கிற உடன்படிக்கையின் கீழ்தான் அமெரிக்காவுக்கு கத்தார் இடம் கொடுத்தது. ஆனால் அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலை தடுக்கவில்லை.
இந்த பின்னணியில்தான் அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) அவசர உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.