சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.
இதற்கிடையே இந்த ஒப்பந்தம் குறித்து இந்தியா முதல்முறையாக மவுனம் கலைத்துள்ளது. இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதிசெயல்படும் என நம்புவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
பாகிஸ்தான் சவூதி இடையே கடந்த புதன்கிழமை ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தானுக்கு எதிராக யாராவது தாக்குதல் நடத்தினால் அது இரு நாடுகளுக்கும் (சவூதி, பாகிஸ்தான்) எதிரான தாக்குதலாகக் கருதப்படும். மேலும், இரு நாடுகளும் இராணுவ ரீதியான ஆதரவை அளிக்கும்.
இதற்கிடையே சவூதி அரேபியா – பாகிஸ்தான் இடையேயான இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இருதரப்பு உறவுகளின் (இந்தியா சவூதி உறவு) முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, பரஸ்பர நலன்களுக்கும் உணர்வுகளுக்கும் சவூதி அரேபியா மதிப்பளிக்கும் என எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்தியாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக நல்லுறவு இருக்கிறது. இரு நாட்டு உறவு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. எனவே, அவர்கள் பரஸ்பர நலன்களையும் உணர்வுகளையும் கருத்தில் கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
பாகிஸ்தானும் சவூதி அரேபியாவும் கடந்த புதன்கிழமை இந்தப் பாதுகாப்பு கையெழுத்திட்டன. பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் சவுதி சென்றிருந்தபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானை எந்தவொரு நாடு தாக்கினாலும் பாக்.கிற்கு ஆதரவாக சவூதி வரும்.
கடந்த பல ஆண்டுகளாகவே சவூதி அரேபியாவின் முக்கிய கூட்டாளியாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் பல காலமாகவே நல்லுறவு உள்ளது. அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலேயே இந்த ஒப்பந்தம் அமைகிறது. இந்த ஒப்பந்தத்தில் இருக்கும் மற்றொரு பாயிண்டும் முக்கியமானது. அதாவது பாகிஸ்தானின் அணு ஆயுதத் திறன் சவூதிக்கு தேவைப்பட்டால் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவும் முக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் இப்போது சவூதியிடம் அணு ஆயுதங்கள் எதுவும் இல்லை. மத்தியக் கிழக்கில் இஸ்ரேலிடம் மட்டுமே அணு ஆயுதம் இருக்கும் நிலையில், அதற்கு செக் வைக்கும் வகையில் இப்படி பாகிஸ்தானின் அணு ஆயுதம் சவூதிக்கும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டு இருக்கிறது. இந்த இரு விடயங்களும் தான் சவூதி – பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
அணு ஆயுதம் ஏந்திய ஒரே முஸ்லிம் நாடான பாகிஸ்தான், ஆசியாவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும், ஆனால் அதன் மிகப் பெரிய எதிரியான இந்தியாவிலிருந்து பாதுகாக்க 600,000 க்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட இராணுவத்தைக் கொண்டுள்ளது.
அண்டை நாடுகள் மூன்று பெரிய போர்களை நடத்தியுள்ளன, மே மாதத்தில் நடந்த நான்கு நாள் மோதல் உட்பட பல மோதல்களுடன், இது பல தசாப்தங்களில் அவர்களின் கடுமையான சண்டையாகும்.