போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை (30) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
‘தேச ஒருமைப்பாடு தேசிய இயக்கம்’ என்ற தொனிப்பொருளில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதுதொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சுகததாச மைதானத்தில் நடைபெறவுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை, மாவட்ட சபைகள், பிராந்திய சபைகள், மற்றும் பொதுப்பாதுகாப்புக் குழுக்கள் ஆகிய நான்கு முக்கிய துறைகள் ஒன்றிணைந்து இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளன.
பொலிஸாரின் தரவுகளுக்கு அமைவாக கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் 1,482 கிலோ 820 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பில் 59,243 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு 2,542 கிலோ 454 கிராம் ஐஸ் கைப்பற்றப்பட்டுள்ளதோடு 67,762 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 582 கிலோ 136 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள் கைபற்றப்பட்டதுடன் 1,444 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று 14,434 கிலோ 468 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு 59,482 பேர் கைது செய்யப்பட்டதுடன் 32 கிலோ 642 கிராம் கொகைனும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு 86 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 39,617 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதோடு அவற்றை விநியோகித்த 2,921 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
