இன்று (29) முதல் நாடு முழுவதும் கிழக்கிலிருந்தான மாறுபட்ட அலை காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால், இன்றிலிருந்து சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இன்றையதினம் (29) நாட்டின் ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இப்பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வட மாகாணத்திலும் கண்டி, அநுராதபுரம், திருகோணமலை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, மொணராகலை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 கி.மீ. வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
