பங்களாதேஷின் முதலாவது பெண் பிரதமர் எனும் பெயர்பெற்ற முன்னாள் பிரதமர் பேகம் காலிதா ஷியா காலமானார்.
மிக நீண்டநாளாக சுகவீனமுற்றிருந்த அவர், இன்று (30) காலை பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானதாக, அவரது கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி (BNP) அறிவித்துள்ளது.
அவர் இன்று காலை 6.00 மணிக்கு மரணமடைந்ததாக, BNP வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காலிதா ஷியா முதுமை காரணமான உடல்நல பிரச்சினைகள் தொடர்பில் பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நீரிழிவு, கல்லீரல், எலும்பு வலி, இருதய சிக்கல்கள் இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் 1991-1996 மற்றும் 2001-2006 ஆகிய காலகட்டங்களில் இரண்டு முறை பங்களாதேஷின் பிரதமராகப் பதவி வகித்து, பங்களாதேஷின் அரசியலில் மிக முக்கியமான மற்றும் பிரபலமான தலைவியாக விளங்கினார்.
காலிதா ஷியாவின் அரசியல் வாழ்க்கை பல மாறுபட்ட தருணங்களைக் கொண்டிருந்தது. அவரது தலைமையில் நாடு ஜனநாயக அரசியலமைப்பை விரிவுபடுத்தப்பட்டு, பல மாற்ற நிலைகளையும் சந்தித்தது.
இவரது மரணம் பங்களாதேஷின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயத்தின் நிறைவாக அமைவதாக அரசியல் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் பேகம் காலிதா ஷியாவின் மகனும், பங்களாதேஷ் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான தாரிக் ரஹ்மான் 17 வருடங்களுக்கு பின்னர் கடந்த டிசம்பர் 25ஆம் திகதி தாய்நாட்டுக்கு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
