சிரியாவில் செயல்பட்டு வரும் குர்திஷ் இன மக்களின் ஆயுதக் குழுவான சிரிய ஜனநாயகப் படையுடன்(STF), அந்நாட்டு அரசு போா்நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
இதன்மூலம், சிரியாவில் அதிகாரப் பகிா்வுக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் நடந்து வந்த உள்நாட்டுப் போா் முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி டாம் பாரக் முன்னிலையில் இறுதியான இந்த ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, எஸ்டிஎஃப் கட்டுப்பாடில் இருந்த ரக்கா நகருக்குள் அரசுப் படைகள் முறைப்படி நுழைந்தன.
கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பரில், முன்னாள் ஜனாதிபதி அல்-அஸாத்தின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு, நாடு முழுவதும் அரசின் கட்டுப்பாட்டைக் கொண்டுவரப் போராடி வந்த இடைக்கால ஜனாதிபதி அஹ்மது அல்-ஷாரா, இந்த ஒப்பந்தம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.
‘இந்த வெற்றி அனைத்து சிரிய மக்களுக்கும் சொந்தமானது; நாடு பிரிவினையிலிருந்து ஒற்றுமையை நோக்கி நகா்கிறது’ என்று அவா் பெருமிதத்துடன் கூறினாா்.
மேலும், குர்திஷ் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஹசாகா மாகாண நிா்வாகம் மற்றும் ஐ.எஸ். உறுப்பினர்கள் உள்ள சிறைகள் அனைத்தும் இனி அரசின் மேற்பாா்வையில் இயங்கும்.
ஐ.எஸ். உறுப்பினர்களுக்கு எதிரான போரில் பெரும் பங்காற்றிய எஸ்.டி.எஃப், இனி நாட்டின் பாதுகாப்புப் படையில் ஒரு அங்கமாக இருக்கும். அந்த அமைப்பின் தலைவா்களுக்கு அரசு நிா்வாகத்தில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகார மாற்றங்கள் அனைத்தும் படிப்படியாகச் செயல்படுத்தப்படும் என்று அதிபா் அஹ்மது அல்-ஷாரா தெரிவித்துள்ளாா். மேலும், உறுப்பினர்கள் குர்திஷ் இன மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அவா் ஒரு சிறப்பு ஆணையையும் பிறப்பித்துள்ளாா்.
நீண்ட காலப் பிரிவினைக்குப் பிறகு, நாட்டின் முக்கிய எல்லைப் பகுதிகள் மற்றும் மின் நிலையங்கள் ஒரே நிா்வாகத்தின்கீழ் வருவதால், சிரியாவின் பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
